காத்மண்டு : நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். கபில்வஸ்து பகுதியில் இருந்து காத்மண்டு நோக்கி சென்று கொண்டு இருந்த பயணிகள் பேருந்து கஜுரி பகுதியில் திரிசூலி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 5 பேர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த நேபாள போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் ஆற்றில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஏறத்தாழ 30 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏறத்தாழ 7 பேர் இந்த கோர விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. பள்ளத்தில் பேருந்து இறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.