தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

ETV Bharat / international

வெள்ளம், நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் நேபாளம்.. பலி எண்ணிக்கை 112 ஆக உயர்வு! - Nepal Floods And Landslides

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கிய மக்களில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 112-ஆக உயர்ந்துள்ளது என்றும், 68 பேர் காணவில்லை என்றும் அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது.

நேபாளத்தை புரட்டிப்போட்ட கனமழை, வெள்ளம் -கோப்புப்படம்
நேபாளத்தை புரட்டிப்போட்ட கனமழை, வெள்ளம் -கோப்புப்படம் (Credits - ANI)

காத்மாண்டு (நேபாளம்):இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்கும் நேபாளம் அடிக்கடி இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படுகிறது. கனமழை, நிலச்சரிவு ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக நேபாளம் உள்ளது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும், தலைநகர் காத்மாண்டுவில் வெள்ளப்பெருக்கு மட்டும் அல்லாது, சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி தற்போதுவரை 112 பேர் பலியாகியுள்ளனர் என்றும் மீட்புப் பணிகள் முழு வீச்சில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் ஆயுதப்படை (APF) மற்றும் நேபாள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில், காவ்ரேபாலன்சௌக்கில் மொத்தம் 34 பேரும்; லலித்பூரில் 20 பேரும்; தாடிங் 15 பேரும்; காத்மாண்டுவில் 12 பேரும்; மக்வான்பூரில் 7 பேரும்; சிந்துபால்சௌக்கில் 4 பேரும்; டோலாகாவில் 3 பேரும்; பஞ்ச்தார் மற்றும் பக்தபூர் மாவட்டங்களில் தலா 5 பேரும்; தன்குடா மற்றும் சோலுகும்புவில் தலா 2 பேரும்; ராம்சாப், மஹோத்தாரி மற்றும் சுன்சாரி மாவட்டங்களில் தலா ஒருவர் என 3 பேரும் என மொத்தம் 112 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க:தென்னாப்பிரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்.. 15 பெண்கள் உள்பட 17 பேர் சுட்டுக்கொலை

இதுமட்டும் அல்லாது, 68 பேரை காணவில்லை என்றும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் கூறியபோது, சமீபத்திய மழைப்பொழிவு காத்மாண்டு பள்ளத்தாக்கில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நேபாள ராணுவம், ஆயுதப்படை மற்றும் நேபாள போலீசார் நாடு முழுவதும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுமட்டும் அல்லாது, கனமழை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய தகவல்களையும் நாங்கள் சேகரித்து வருகிறோம். இந்த பேரழிவால் நாடு முழுவதும் மக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, நேபாள நாட்டின் தேசிய பேரிடர் அபாயம் குறைப்பு மேலாண்மை ஆணையம் (NDRRMA) மழையினால் ஏற்படக்கூடிய பேரழிவுகள் குறித்து 77 மாவட்டங்களில் 56 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்து, மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details