சென்னை:அன்றாட வாழ்க்கையின் சலசலப்புகளுக்கு மத்தியில், உங்களுக்காக நீங்கள் செலவிடும் நேரம் எவ்வளவு? உங்களுக்கு பிடித்ததை நீங்கள் செய்கிறீர்களா? என்ற கேள்விகளுக்கு நம்மில் பலருக்கு பதில் கிடையாது. பொறுப்புகளையும், கடமைகளையும் தோளில் போட்டு ஓடுவதால் நமக்கு நம்மை பற்றிய சுய கவனிப்பு இல்லாமல் போய்விடுகிறது.
உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்க சுய கவனிப்பு அவசியம். அப்படி, ஆரோக்கியத்திற்கு அடித்தளமாக இருக்கும் சுய பராமரிப்பு அல்லது சுய கவனிப்பு எனச் சொல்லக்கூடிய செல்ஃப் கேருக்கான தினம் (INTERNATIONAL SELF CARE DAY) இன்று (24.07.2024) கடைபிடிக்கப்படுகிறது. செல்ஃப் கேர் செய்வது சுயநலமாக பார்க்கப்படாமல் அத்தியாவசியமாக கருத வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
உலகளவில் இந்திய பெண்கள் தான், தங்களுக்கு பிடித்தவற்றை செய்ய முடிவெடுக்கும் போது குற்ற உணர்ச்சியை (guilty) எதிர்கொள்கிறார்கள் என்கிறது உலக சுகாதார அமைப்பு. குறிப்பாக, 88 சதவீத அமெரிக்கர்கள் செல்ஃப் கேர் செய்கின்றனர் எனவும் அதிலும், ஆண்களை விட பெண்கள் தான் தங்களை பார்த்துக் கொள்வதில் குற்ற உணர்ச்சியை சந்திக்கின்றனர் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
செல்ஃப் கேரை ஆரம்பிக்க வேண்டிய அறிகுறி: எப்போதும் சோர்வாக உணர்வது, சம்பந்தம் இல்லாமல் எரிச்சல் அடைவது, செய்யும் வேலையில் கவனக் குறைபாடு, உணவு உண்ணும் முறையில் அடிக்கடி மாற்றங்கள், சமூக வாழ்வில் இருந்து விலகுவது, அதிகமாக உணர்ச்சிவசப்படுவது, எதிர்மறையான எண்ணங்கள் ஆகியவற்றை நீங்கள் எதிர்கொண்டால் உடனடியாக உங்கள் மேல் கவனம் செலுத்த ஆரம்பியுங்கள்.