ஹதராபாத்:இப்போதெல்லாம், சூப்பர் மார்கெட்டில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட காய்கறிகளை (Frozen Vegetables) வாங்கி சமைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த உறைந்த காய்கறிகளின் ஊட்டச்சத்து மதிப்புகளில் ஏற்ற இறக்கங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால், அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் கிடைக்க, உணவுகள் சுவையாக இருக்க அவற்றை சமைக்கும் போது சில முன்னெச்சரிக்கைகள் அவசியம் என்கின்றனர். அதை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்..
தேர்ந்தெடுக்கும் போது கவனம் அவசியம்:
- பதப்படுத்தப்பட்ட காய்கறிகளை தேர்ந்தெடுப்பதற்கு முன், பாக்கெட்டில் உள்ள விவரங்களை முழுமையாக படிக்க வேண்டியது அவசியம். எந்த காய்கறிகளை எவ்வளவு நேரத்திற்கு சமைக்கலாம், எவ்வளவு நாட்களுக்கு பயன்படுத்தலாம் போன்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
- அதே போல, பாக்கெட்டில் உள்ள லேபிளைப் படித்து ப்ரிசர்வேட்டிகள் அதிகம் இல்லாதவற்றை எடுத்துக்கொள்வது சிறந்தது. மேலும், இந்த பாக்கெட்டுகளை அறை வெப்பநிலையில் வைக்கலாமா? வேண்டாமா? போன்ற விவரங்களையும் தெரிந்து தேர்ந்தெடுங்கள்..
சமைக்கும் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்..
- நாம் நேரடியாக சந்தைக்கு சென்று வாங்கும் காய்கறிகளை சமைப்பது போல் அல்லாமல் பதப்படுத்தப்பட்ட காய்கறிகளை சமைக்கும் போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியம். இப்படி செய்வதால், சுவையும்,சத்தும் குறையாது என்கின்றனர் நிபுணர்கள்.
- உறைந்த காய்கறிகளை எப்படி சமைக்க வேண்டும்? அவற்றை எவ்வளவு நேரம் சமைக்க வேண்டும்? என்பதை பாக்கெட்டில் குறிப்பிட்டிருப்பார்கள். அதனை பின்பற்ற வேண்டும்.
- காய்கறிகளை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த உடனேயே சமைக்க வேண்டுமா? அல்லது அறை வெப்பநிலைக்கு கொண்டு வர வேண்டுமா? என்பதையும் லேபிளை படித்து சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
- பொதுவாகவே, பதப்படுத்தப்பட்ட காய்கறிகளை தவிர்ப்பது தான் நல்லது என்கின்றனர் நிபுணர்கள். காரணம், காய்கறிகள் முதலில் வெந்நீரில் சிறுது நேரம் வேக வைத்த பின்னரே பதப்படுத்தப்படுகிறது. இதனால், சத்துக்களை தக்க வைக்க சரியான நேர அளவில் சமைப்பது அவசியம் என்கிறார். நீண்ட நேரம் சமைத்தால், அவை சுவையை இழந்து, சத்துக்களை இழக்கும் வாய்ப்பு உள்ளது.
- பதப்படுத்தப்பட்ட காய்கறிகள் ஏற்கனவே ஓரளவிற்கு சமைக்கப்பட்டிருக்கும் என்பதால், கொஞ்சம் வேறு விதமாக, வதக்கி அல்லது வறுத்தும் சமைத்துப் பாருங்கள்.
- பதப்படுத்தப்பட்ட உணவுகளை சமைத்த பின்னர், மீதமானதை எப்படி பத்திரமாக ஸ்டோர் செய்யலாம் என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகள் மீதமானால், அதை முதலில் அறை வெப்பநிலைக்கு கொண்டு வந்து, காற்றுப் புகாத பாத்திரம் அல்லது ஜிப் லாக் பேக்கில் வைத்து விடுங்கள். பின்னர், தேவைப்படும் போது சூடாக்கி பயன்படுத்துங்கள்.