சிறுநீர் கழிப்பது இயல்பு தான். ஆனால், அடிக்கடி சிறுநீர் கழிப்பது பல பிரச்சனைகளை வழிவகுக்கும் என சர்வதேச ஆய்வில் தெரியவந்துள்ளது. உடலில் உள்ள கழிவு வெளியேறுகிறது என்ற எண்ணத்தில், அலட்சியமாக இருக்க கூடாது எனவும் இது சில உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான காரணம் என்ன? அதை பற்றி தெரிந்து கொள்ளலாம்..
அடிக்கடி சிறுநீர் கழித்தல் காரணம்:
- சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம்:பொதுவாகவே, சிலர் தண்ணீர் குடித்தாலும், குடிக்காவிட்டாலும் அதிகமாக சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை உடையவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் இதனை சாதரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடணடியாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். அடிக்கடி சிறுநீர் கழிப்பது டைப்-1 மற்றும் டைப்-2 நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே இதுபோன்ற அறிகுறிகளை நீங்கள் எதிர்கொண்டால், உங்கள் சர்க்கரை அளவை உடனடியாக பரிசோதனை செய்யுங்கள்
- சிறுநீரகக் கற்கள்: வழக்கத்தை விட அடிக்கடி சிறுநீர் கழிப்பது சிறுநீர்ப்பையில் கற்கள் உருவாகக் காரணமாக இருக்கலாம் என்பதை நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் (NIH) வெளிப்படுத்தியுள்ளது. சிறுநீர் கழிக்கும் போது ஏதேனும் அசெளகரிகயங்களை சந்தித்தால் உடணடியாக மருத்துவரை அணுகவும். சிறுநீரக கற்கள் சிலருக்கு கடுமையான வலியை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
- தொற்று: சிறுநீர் அமைப்பில் ஏற்படும் தொற்றும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு ஒரு காரணமாகும். பொதுவாக, இந்த தொற்று ஆண்களை விட பெண்களில் அதிகம் காணப்படுகிறது. சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் அல்லது இரத்தப்போக்கு போன்ற பிரச்சனைகள் இருந்தால் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- கர்ப்ப காலம்: கர்ப்ப காலத்தில் பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடலாம். இந்த நிலை கர்ப்பிணிப் பெண்களுக்கு பொதுவானது தான். வயிற்றில் குழந்தை வளரும்போது கருப்பை வளர்ந்து சிறுநீர்ப்பையில் அழுத்தம் கொடுக்கிறது. இதனால் வழக்கத்தை விட அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.
ஆனால் சிலருக்கு சிறுநீர் கழிப்பது அதிகரிக்கும் போது பிரச்சனையாக முடிகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுக வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
- காபியும் காரணம்: காஃபின் அதிகம் உள்ள பானங்கள் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளும் அடிக்கடி சிறுநீர் வெளியேறுவதை அதிகரிக்கிறது.