இந்தியாவில் HMPV வைரஸ் பாதிப்பு அதிகரித்து பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், மகாராஷ்டிரா புனேவில் குய்லின் பாரே சிண்ட்ரோம் (Guillain barre syndrome - GBS) என்னும் நரம்புகளை பாதிக்கும் நோய் தாக்குதல் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் 101 நபர்களுக்கு GBS நோய் தொற்று உறுதியான நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதில் 16 நோயாளிகள் வென்டிலேட்டரில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இந்த தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுகாதாரத் துறையினர் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். GBS நோய் தொற்று நேரடியாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுவதில்லை என்றாலும், அசுத்தமான நீர் மற்றும் உணவு மூலம் பரவுவதைக் கருத்தில் கொண்டு கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்கிறார் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் டாக்டர் பி.ரங்கநாதன். இந்த நோயின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சை பற்றிய முழுமையான விவரங்களை இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.
குய்லின் பாரே சிண்ட்ரோம் என்றால்?: Guillain-Barre syndrome (GBS) என்பது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு புற நரம்புகளைத் தாக்கும் ஒரு தன்னுடல் தாக்க நிலையாகும். இது திடீர் தசை பலவீனம் மற்றும் உணர்வின்மைக்கு வழிவகுக்கிறது. இந்த நிலை எல்லா வயதினரையும் பாதிக்கலாம், ஆனால் இது பொதுவாக இளைஞர்கள் மற்றும் இளம்வயதினரை அதிகம் பாதிக்கிறது. இந்த தொற்றுக்கான சரியான காரணம் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை என்றாலும், நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுகளால் இது அடிக்கடி தூண்டப்படுவதாக மருத்துவர் கூறுகிறார்.