சென்னை:காதலர்களானாலும் சரி, கணவன் மனைவி ஆனாலும் சரி என்றும் அன்பை மட்டும் பொழிந்துகொண்டு கொஞ்சலும், காதலுமாக மட்டும் இருக்க மாட்டார்கள். அவ்வப்போது சண்டை கோழிபோல் சாடிக்கொள்வார்கள். அப்படி இருந்தாலும், "தள்ளிப்போகாதே எனையும் தள்ளிப்போகச் சொல்லாதே" என்ற அளவுக்குக் காதல் கொள்ள வேண்டுமா?
வேலைகளுக்கு நடுவே எப்படி காதல் செய்வது இதற்கு ஒரு சண்டை... எனக்கு மட்டும் முக்கியத்துவம் இல்லை அதற்கு ஒரு சண்டை.. எல்லா வேலைகளையும் நான்தான் செய்ய வேண்டுமா இப்படியும் சண்டை.. ஆனால் இவை அனைத்தும் இல்லாமல் துணையுடனான வாழ்க்கை எப்படி நிறைவு பெறும் என்கிறார்கள் நிபுணர்கள். என்னதான் நடந்தாலும் நம்மை விட்டுப்போகாத துணை நம்முடனே இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
1. உங்கள் துணையுடன் இரவின் அமைதியையும் அழகையும் இரசிக்க ஒரு நாளை ஒதுக்கி வையுங்கள்
- இரவில் ஒரு பைக் ரைடு
- கேண்டில் லைட் டின்னர்
- மொட்டை மாடி நிலாச் சோறு
- கடற்கரை பயணம்
- பால்கனியில் அமர்ந்து கதைபேசுவது
இப்படி இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம். உங்கள் உறவை வலுப்படுத்த அந்த இரவை எவ்வளவு அழகாக இயலுமோ அதற்காக முயலுங்கள் என்கிறார்கள் நிபுணர்கள்.
2. புதிய பயணங்களைத் திட்டமிடுங்கள்
- உறவினர் அல்லது நண்பர்கள் வீட்டிற்குச் செல்வது
- உங்கள் பட்ஜெட்டில் சுற்றுலாத் தலம் செல்வது
- பார்க் அல்லது ஷாப்பிங் போவது
- புதிய உணவகத்தைத் தேர்வு செய்து உட்கொள்வது
இப்படி உங்கள் வீட்டை விட்டு வெளியே வந்து புதிய புதிய விஷயங்களை இருவருமாகச் சேர்ந்து ரசிப்பது என்பது மிகவும் சிறந்தது. இதற்கு நீங்கள் அதீத பணம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களால் முடிந்த வகையில் புதிய மகிழ்ச்சியைப் பெறுங்கள்.
3. இருவருமாக உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்
- தோட்டத்தையும், வீட்டையும் சுத்தம் செய்யுங்கள்
- சமையலறையில் உங்களுக்குப் பிடித்த பாடலுக்கு நடனமாடுங்கள்
- ஒன்றாக யோகா மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்
- ஒருவருக்கொருவர் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள் குறித்து உரையாடுங்கள்
இது உங்கள் இருவருக்கும் இடையேயான புரிதலை மேம்படுத்தவும், ஒருவர் மற்றொருவருக்கு ஆலோசனை வழங்கி ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும் உதவியாக இருக்கும். அது மட்டும் இன்றி உங்களது பாலியல் உறவிலும் சுறுசுறுப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.