சென்னை:நமது உடலின் செயல்பாட்டில் சுவாச உறுப்பான நுரையீரலுக்கு முக்கிய பங்காற்றுகிறது. தற்போது உலகில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமான பலரும் நுரையீரல் சார்ந்த (அல்லது) சுவாசம் தொடர்பான நோய்களை எதிர்கொள்கின்றனர். இந்த நேரத்தில் நல்ல ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதற்குச் சுவாச நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துவது அவசியம்.
நமக்கு இயற்கையாகக் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள், மூலிகைகளிலிருந்து சுவாச நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெற முடியும் என்கிறார் ஜிண்டால் நேச்சரியூர் இன்ஸ்டிட்யூட்டின் தலைமை உணவியல் நிபுணர் சுஷ்மா. இயற்கை உணவின் மூலம் எப்படி ஒட்டுமொத்தச் சுவாச ஆரோக்கியத்தையும் எப்படி மேம்படுத்துவது என உணவியல் நிபுணர் சுஷ்மா கூறியதை இத்தொகுப்பில் காணலாம்.
அழற்சி எதிர்ப்பு உணவுகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்:அழற்சி எதிர்ப்பு உணவுகளை ஒருவர் தன் உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். ஆளி விதைகள் (flax seeds), சுருள்பாசி (spirulina), சியா விதைகள் (chia seeds) ஆகியவற்றில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அழற்சி எதிர்ப்பிகளாக செயல்படுகின்றன. மேலும், அன்னாசிப் பழத்தில் உள்ள ப்ரோமலைன் என்சைம் நுரையீரலிலிருந்து சளியை வெளியேற்ற உதவுகிறது. ஆப்பிள், பெர்ரி, ப்ரக்கோலி, க்ரீன் டீ ஆகியவற்றில் உள்ள ஏராளமான குவெர்செடின் சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பாஸ்போலிப்பிட்களை எடுத்துக்கொள்ளுங்கள்:கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாஸ்பரஸால் ஆன உணவுப் பொருட்களே பாஸ்போலிப்பிட்கள் எனப்படும். பாஸ்போலிப்பிட்கள் நிறைந்த உணவுகளை உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். குறிப்பாகச் சோயா பால், தானியங்கள், நிலக்கடலை, எள், சூரியகாந்தி விதைகள் உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களை உணவில் எடுத்துக்கொள்ளலாம்.
குறைந்த Fodmap உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்:Fodmap என்பது ஒலிகோசாக்கரைடுகள், டிசாக்கரைடுகள், மோனோசாக்கரைடுகள் மற்றும் பாலியோர்களை குறிக்கிறது. Fodmap ஒரு கார்போஹைட்ரேட் ஆகும். இது செரிமானத்தை எதிர்க்கும் தன்மையுடையது. Fodmap நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் குடல் எரிச்சல், செரிமானப் பிரச்சினைகள் ஏற்படும். இதன் விளைவாக நுரையீரல் வீக்கம் ஏற்படலாம். கோதுமை, கம்பு, பால் பொருட்கள் போன்றவற்றை உணவுப் பழக்கத்திலிருந்து நீக்குவதன் மூலம் நுரையீரல் வீக்கம் ஏற்படும் அபாயத்தைத் தடுக்க முடியும்.