ஹைதராபாத்: மழைக்காலம் ஆரம்பம் என்றாலே, சளி, காய்ச்சல், அலர்ஜி முதல் டெங்கு போன்ற தொற்றுநோய்களும் படையெடுக்க ஆரம்பித்துவிடும். காரணம், குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதம் சூழ்நிலையில் தான் நோய்க்கிருமிகள் அதிகம் பரவுகின்றன.
எனவே மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கையாக இருக்க,குழந்தைகள் நோயில் இருந்து தப்பிக்க சித்தாவில் என்னென்ன மருந்துகளை எடுக்கலாம் என்பது குறித்து திருநெல்வேலி பாளையங்கோட்டையை சேர்ந்த அரசு சித்த கல்லூரி மருத்துவர் சுபாஷ் சந்திரன் நம்மிடம் பகிர்ந்த கருத்துக்களை பார்க்கலாம்.
உணவில் கசப்பை சேருங்கள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு கசாயம் ஒரு சிறந்த மருந்தாகும். அதே போல் நமது உணவில் கொஞ்சம் கசப்பு சுவையை சேர்க்க வேண்டும். அறுசுவைகளில் கசப்பை நாம் அறவே நீக்குவதால், நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நீரிழிவு நோய்க்கு வழங்கப்படும் மருந்தில் கசப்பு, துவர்ப்பு அதிகம் பயன்படுத்துகிறோம்.
துளசியும், தேனும்:குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேன் முதன்மையான மருந்தாகும். சளி, கபம் சம்பந்தப்பட்ட நோய்கள் வந்தால் துளசி சாறும், தேனும் இயற்கையான மருந்து. தேனை எப்போதும் பச்சையாக கொடுக்காமல், நல்ல கம்பியை சூடு செய்து தேனில் சொரசம் செய்ய வேண்டும். அதாவது அந்த கம்பியை சூட்டோடு தேனில் வைத்தால் சொரசம் என்று சொல்வார்கள். அதே போல் இஞ்சி சாறும் தேனும் சொரசம் செய்து கொடுத்தால் அது சிறந்த மருந்தாக இருக்கும்.
மஞ்சள்:நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவில் மஞ்சள் அதிகம் பயன்படுத்த வேண்டும். மஞ்சள் மற்றும் மிளகை வாரத்திற்கு இரண்டு நாளாவது உணவில் சேர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இந்த இரண்டும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும் அளவுக்கு மஞ்சளில் செயல்திறன் உள்ளது.
வேப்பிலை உருண்டை:சின்ன குழந்தைகளுக்கு வாரத்தில் ஒரு நாள் வேப்பங் கொழுந்தை சின்ன உருண்டை அளவு கொடுக்க வேண்டும். இது, குடல் புழுக்களை நீக்கி சிறப்பு மருந்தாக செயல்படுகிறது. நமக்கு தெரியாமலே நமது உடலில் அதிக இரசாயன பொருட்களை எடுத்து வருகிறோம்.
நெல்லிக்காயை வாங்கும் போது கவனம் தேவை:குழந்தைகளுக்கு காட்டு நெல்லிக்காய் வாங்கி கொடுக்கலாம். அதேசமயம் எலுமிச்சை பழம் அளவில் உள்ள பெரிய ஹைபிரெட் நெல்லிக்காய் வாங்க வேண்டாம். சிறிய அளவில் உள்ள காட்டு நெல்லிக்காய் வாங்கி கொடுக்க வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஜிங்க் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. எனவே காட்டு நெல்லிக்காயை குழந்தைகள் சாப்பிட வேண்டும்.
மூக்கடைப்பு நீங்க: மூக்கடைப்பு இருந்தால் மஞ்சளை விளக்கு தீயில் காட்டி அதில் வரும் புகையை மூக்கில் காட்டி இழுத்தால் மூக்கடைப்பு உடனடியாக நீங்கும். இல்லாவிட்டால் மிளகை ஒரு சின்ன ஊக்கில் குத்தி தீயில் காட்டி அதில் வரும் புகையை மூக்கில் காட்டலாம்.
இனிப்பு வேண்டாம்: மழை நேரங்களில் குளிர்ச்சியான பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டாம். ஐஸ், ஜூஸ் போன்ற பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் இனிப்புகளையும் மழை காலங்களில் தவிர்க்க வேண்டும். இனிப்பு கபத்தை மேலும் அதிகப்படுத்தும்.சூடான, இயற்கையான பொருட்களை சாப்பிட வேண்டும். லேசான உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.
எந்த கசாயம் பெஸ்ட்?: கசாயத்தை பொறுத்தவரை எந்தெந்த நோய்கள் என்பதை அறிந்து கொடுக்க வேண்டும் மருத்துவர் ஆலோசனைப்படி அருந்த வேண்டும். காய்ச்சல் இருந்தால் நிலவேம்பு கசாயம் குடிக்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு இக்கசாயம் சிறந்த மருந்தாகும். இருமல், சளி இருந்தால் ஆடாதொடை குடிநீர் குடிக்கலாம். கண்டங்கத்திரி இலைகள் கசாயம் போட்டு குடிக்கலாம். அதே சமயம் அனைத்தையும் மருத்துவரின் ஆலோசனை பெற்று குடிக்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க:
- வைட்டமின் D அதிகமுள்ள டாப் 5 உணவுகள் இதோ!..மழைக்காலத்தில் மறக்காமல் சாப்பிடுங்கள்!
- மழைக்காலம் வந்தாச்சு!... நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள சூப்பர் டிப்ஸ்..!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்