தமிழ்நாடு

tamil nadu

நட்ஸ் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்குமா? - ஆய்வில் வெளியான முக்கிய தகவல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2024, 5:30 PM IST

Tree nuts: உடல் ஆரோக்கியத்திலும், ஆற்றலிலும் அதிக பங்கு வகிக்கும் நட்ஸ் வகைகளை தினசரி உண்பதால் நமது உடல் எடை அதிகாரிக்காது என ஒரு ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை:பாதாம், பிஸ்தா, திராட்சை, முந்திரி, வால்நட் போன்ற நட்ஸ் வகைகளை தினசரி உட்கொள்வதால், அதில் இருக்கும் அதிகப்படியான கலோரிகள் மற்றும் கொழுப்புத் தன்மை காரணமாக உடல் எடை அதிகரிக்கும் என காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், இதில் எந்த அளவிற்கு உண்மைத் தன்மை உள்ளது என்பது பற்றி சிந்தித்தது உண்டா?

உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் அளிக்கக்கூடிய நட்ஸ் வகைகளை தினசரி உண்பதால், நமது உடல் எடை அதிகரிக்காது என ஒரு ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது. இது உடல் எடை குறைவாக உள்ளவர்களுக்கு சற்று அதிர்ச்சி அளிக்கும் தகவலே. ஏனெனில், உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தரும் நட்ஸ் வகைகளை, உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே உட்கொண்டு வந்திருப்பதால்.

அமெரிக்காவில் உள்ள வாண்டர்பில்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இது குறித்த ஆய்வினை மேற்கொண்டனர். அதில், 22 முதல் 36 வயதிற்கு உட்பட்ட 84 பேரை, குறைந்தது ஒரு வளர்சிதை மாற்ற நோய்க்குறியாவது (உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்த குளுக்கோஸ், இடுப்பைச் சுற்றி அதிகப்படியான உடல் கொழுப்பு, அசாதாரண ரத்தக் கொழுப்பு அளவுகள்) இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தேர்வு செய்தனர்.

பின்னர், தேர்வு செய்யப்பட்ட அந்த 84 பங்கேற்பாளர்களுக்கும், சிறிதளவு பிஸ்தா உள்பட உப்பில்லாத நட்ஸ் வகைகளையும், கார்போஹைட்ரேட் நிறைந்த உப்பில்லா தின்பண்டங்களையும், ஒரு நாளைக்கு இருமுறை வீதம் 16 வாரங்களுக்கு கொடுத்தனர். இதைத் தவிர, அவர்களின் அன்றாட உணவிலும், செயல்பாட்டிலும் வேறு எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை.

ஆனால், தினசரி இரண்டு வேளை நட்ஸ் வகைகளை பங்கேற்பாளர்கள் எடுக்கத் தொடங்கியதும், ஆய்வில் உட்படுத்தப்பட்ட பெண்களுக்கு இருந்த வளர்சிதை மாற்ற நோய் அபாயம் 67 சதவிகிதம் குறைந்ததாகவும், ஆண்களுக்கு 47 சதவிகிதம் குறைந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், 16 வார ஆய்வின் முடிவில், நட்ஸ் வகைகளைத் தொடர்ந்து உட்கொண்டு வந்த பங்கேற்பாளர்களின் உடல் எடையில் எவ்வித மாற்றமும் ஏற்படாததாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், இவ்வாறு நட்ஸ் வகைகளை உண்டு வந்த பெண் பங்கேற்பாளர்களின் இடுப்பின் சுற்றளவு (வயிற்றுக் கொழுப்பு) குறைந்துள்ளது. இது வளர்சிதை மாற்ற நோய்க்குறி, நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்க்கான முக்கிய ஆபத்து காரணியாகும். மேலும், ஆண் பங்கேற்பாளர்களின் ரத்த இன்சுலின் அளவும் குறைந்துள்ளது. இது மற்றொரு முக்கிய ஆபத்து காரணியாகும்.

இருப்பினும் இந்த ஆய்வின் மூலம், நட்ஸ் வகைகளை தினசரி எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடை அதிகரிக்காது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், நட்ஸ் மூலம் நமது உடலுக்கு கிடைக்கும் அதிகப்படியான கலோரி, நமது உடல் தினசரி இழக்கும் கலோரிகளுக்கு ஈடாவதால், உடல் எடை அதிகரிக்காது. மேலும், கார்போஹைட்ரேட் தின்பண்டங்களை ஒப்பிடுகையில், நட்ஸில் இருக்கும் கொழுப்புச் சத்து உடலின் ஆற்றலில் பெரும் பங்கு வகிப்பதாகவும் ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க:நல்ல தூக்கத்திற்கு பாதங்களை கழுவ வேண்டுமா? - நிபுணர்களின் கருத்து என்ன?

ABOUT THE AUTHOR

...view details