சென்னை:மாறி வரும் காநிலைக்கு இடையே பணியில் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர்களின் ஆரோக்கியம் உறுதி செய்தல் என்ற அறிக்கையின் கட்டுரை, இன்டர்நேஷ்னல் லேபர் ஆர்கனைசேஷன் (international labour organization) இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், காலநிலை மாற்றத்தால் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் உடல்நல பாதிப்புகளை கருத்தில்கொண்டு, தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வழங்கி சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் உள்ள 3.4 பில்லியன் தொழிலாளர்களில் 2.4 பில்லியனுக்கும் அதிகமானோர், பணியின்போது வெப்பத்தின் தாக்கத்திற்கு ஆளாவதாக அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக 2000-ஆம் ஆண்டு 65.5 சதவீதமாக இருந்த பாதிப்பு ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து கடந்த 2020-ஆம் ஆண்டு கணக்குப்படி அது 70.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், உலக அளவில் ஒட்டுமொத்தமாக ஆண்டுதோறும் 22.87 மில்லியன் தொழில் ரீதியான விபத்துகளும், அதனால் 18,970 உயிரிழப்புகளும் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டும் இன்றி ஆண்டுதோறும் சுமார், 2.09 மில்லியன் தொழிலாளர்கள் கைகால், கால் ஊனம் மற்றும் பணியாற்றமுடியாத வாழ்நாள் இளப்பை நேரிடுகின்றனர் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை தாண்டி, பலர் புற்றுநோய், இருதய நோய், சுவாச நோய்கள், சிறுநீரக செயலிழப்பு மற்றும் மனநல பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் எந்தெந்த பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்:
- 1.6 பில்லியன் தொழிலாளர்கள் UV கதிர்வீச்சுக்கு ஆளாகிறார்கள், இதனால் மெலனோமா அல்லாத தோல் புற்றுநோயால் ஆண்டுதோறும் 18,960 க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்
- 1.6 பில்லியன் பேர் பணியிட காற்று மாசுபாட்டிற்கு ஆளாகின்றனர், இதனால் 8.60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்
- விவசாயத்துறையில் 870 மில்லியனுக்கும் அதிகமானோர் பூச்சிக்கொல்லி மருந்தின் தாக்கத்திற்கு ஆளாகின்றனர், இதனால் ஆண்டுதோறும் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர்
- ஒட்டுண்ணி மற்றும் வெக்டார் மூலம் பரவும் நோய்களின் வெளிப்பாடு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 15 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படுகிறது