ஐதராபாத்:கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு உகந்த எடுத்துக்காட்டாக இருக்கும் சியா மற்றும் சப்ஜா விதைகளில் ஏராளமான நன்மைகள் கொட்டிக்கிடக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் அதிகமாக எடுத்துக்கொள்ளும் இந்த விதைகளில் இருக்கும் மற்ற நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்.
சியா விதைகளின் நன்மைகள்:சியா விதைகள் என்பது சால்வியா ஹஸ்பனிக்கா என்ற தாவரத்தின் விதைகளாகும். மெக்ஸிகோவை பூர்விகமாக கொண்ட சியா விதைகள் வெள்ளை, கருப்பு மற்றும் சாம்பல் என மூன்று நிறங்களிலும் கலந்து காணப்படுகிறது. இது பொதுவாகவே ஓவல் வடிவத்தில் இருக்கும்.
இந்த விதைகளை தண்ணீரில் ஊறவைக்கும் போது, தண்ணீரை உறிஞ்சி ஜெல் மாதிரி காணப்படுகிறது. கோடை காலத்தில், சாதாரணமாக சாலையோரங்களில் உள்ள ஜூஸ் கடைகளில் நாம் பருகும் குளிர்பானங்களில் சியா விதைகளை கலந்து தருவார்கள்.
இது மட்டுமல்லாது சாலட் தயாரிக்கும் போதும், இல்லையென்றால் இரவில் ஒரு கப்பில் இரு டிஸ்பூன் சியா விதைகளை ஊற வைத்து பின்னர், அதனை காலையில் உங்களுக்கு பிடித்த பழத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். இதை சியா புட்டிங் (Chia Pudding) என்கிறார்கள். உடல் எடை குறைப்பு, நீரிழிவு நோய், கிருமிகளை அழிப்பது,மலச்சிக்கல், எலும்புகளை பலப்படுத்துவதில் சியா விதைகள் முக்கிய பங்கு வகுக்கிறது.
சியா விதையில் இருக்கும் சத்துக்கள்: நார்ச்சத்து, கால்சியம், புரதம், மெக்னீசியம், பாஸ்பரஸ், ஆண்டி ஆக்ஸிடண்ட், ஒமேகா 3 அமிலம்,வைட்டமின் சி, வைட்டமின் பி3 என சத்துக்கள் நிறைந்த பெட்டகமாக சியா விதைகள் இருக்கின்றன.
எப்படி பயன்படுத்துவது?:சியா சீட்ஸ் கலந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் நீண்ட நேரம் வயிறு நிறைந்ததாக இருக்கும். இதனால் பசி எடுக்காமல், தேவையற்ற உணவுகள் உண்ணுவதை தவிர்க்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், காலை உணவாக பழங்களுடன் சியா விதைகளை எடுத்துக்கொள்ளலாம். காலையில் டீ அல்லது காபியை குடிப்பதை தவிர்த்து சியா சீட்ஸ் கலந்த பழச்சாறுகளை பருகலாம்.