தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அறுசுவை உணவு..இது தெரியாம இருக்காதீங்க! - IMPORTANCE OF SIX FLAVOURS

அறுசுவைக்கும் நம் உடலின் ஆரோக்கியத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அறுசுவைகள் தரும் நன்மைகள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)

By ETV Bharat Health Team

Published : Feb 6, 2025, 11:55 AM IST

'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்ற திருமூலரின் சொல்லுக்கு இணங்க, ஆரோக்கியத்தில் அக்கரை செலுத்தினால் தான் நாம் அனைவரும் சீரோடு, சிறப்போடும் வாழமுடியும். உணவு மருந்தாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் மருந்தே உணவாகிவிடும் என்பதை அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில், அறுசுவைக்கும் நம் உடலின் ஆரோக்கியத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நமது பாரம்பரியத்தில் மட்டும் தான், 'அறுசுவை விருந்து, அறுசுவை உணவு' என்பது உண்டு. வேறு எந்த நாட்டிலும் இந்த வார்த்தைகளை கூட கேட்க முடியாது.

அறுசுவை என்னென்ன?: இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, உவர்ப்பு என்ற அறுசுவையை நாம் வெறும் சுவைக்காக மட்டுமே பார்க்கிறோம். ஆனால், ஒவ்வொன்றுக்கும் இருக்கும் குணங்களை நாம் கண்டுகொள்வதில்லை. இந்த அறுசுவைகளையும் யார் ஒருவர் உட்கொண்டு வந்தாலும் உடலில் நோய்க்கான அறிகுறிகளே இருக்க முடியாது என ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது. அதன்படி, அறுசுவைகளின் குணங்களையும், முக்கியத்துவத்தையும் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கோப்புப்படம் (Credits - Pexels)

இனிப்புச் சுவை: அறுசுவைகளில் பெரும்பாலானோருக்கு பிடித்த சுவை பட்டியலில் இனிப்பு முதல் இடத்தில் இருக்கும் என்றே சொல்லலாம். அரிசி, கோதுமை போன்ற தானியங்கள், உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட் போன்ற கிழங்கு வகைகளை, பழவகைகளில் இயற்கையான இனிப்பு சுவை அதிக அளவில் உள்ளது.

இனிப்பு சுவை, மனதிற்கும் உடலுக்கு உற்சாகத்தை தரக்கூடியதாக இருக்கிறது. குழந்தையின் வளர்ச்சிக்கு இயற்கையான இனிப்பு அவசியமாக உள்ளது. இது அதிகமாயின் உடல் சோர்வு, தளர்வு, இருமல், அதிகத் தூக்கம், உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் காயத்ரிதேவி.

இதையும் படிங்க:உடலில் நீர்ச்சத்து குறைபாடு? வாரத்திற்கு 2 முறை இந்த காய்கறி சாப்பிடுங்க!

துவர்ப்புச் சுவை:உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்ற சுவையாக இருப்பது துவர்ப்பு சுவை தான். மாதுளை, மஞ்சள், அத்திக்காய், வாழைக்காய், மாவடு போன்ற காய் வகைகளில் துவர்ப்பு சுவை அதிகம் காணப்படுகிறது. உடலில் சரியான அளவு துவர்ப்பு, அதிக வியர்வை, ரத்தப் போக்கு, வயிற்று போக்கினை சரி செய்கிறது. இதுவே, அதிகமானால், சரளமாக பேசுவதை பாதிப்பதோடு, இளமையில் முதுமை தோற்றத்தை ஏற்படுத்தும் மற்றும் வாத நோய்களை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.

கோப்புப்படம் (Credits - Pexels)

காரம்:பசியுணர்வைத் தோற்றுவிப்பதோடு மட்டுமல்லாமல், செரிமானத்திற்கு காரச் சுவை உதவுகிறது. மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம், கடுகு, மிளகு போன்றவற்றில் இயற்கையாக காரம் அடங்கியுள்ளது. இவை, அதிகப்படியான நீரை வெளியேற்றவும், உடல் இளைக்கவும், இரத்தத்தை சுத்திகரிக்கவும், தோல் நோய்களை தடுக்கவும் உதவுகிறது. இதனை அதிகளவில் எடுத்துக்கொண்டால் உடல் சூட்டை அதிகரிப்பது, குடல் புண்கள் போன்றவற்றை ஏற்படுத்தும்.

கசப்புச் சுவை: சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் வெறுக்கப்படும் சுவையாக கசப்பு இருந்தாலும், அதிகம் நன்மைப் பயக்கும் சுவையும் இதுவாக தான் இருக்கிறது. அறுசுவைகளில் கசப்பை நாம் அறவே நீக்குவதால், நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது என்கிறார் திருநெல்வேலி பாளையங்கோட்டையை சேர்ந்த அரசு சித்த கல்லூரி மருத்துவர் சுபாஷ் சந்திரன்.

கோப்புப்படம் (Credits - Pexels)

இது இயற்கையாக, பாகற்காய், வெந்தயம், பூண்டு, வேப்பம்பூ, சுண்டக்காய், அதலக்காய் போன்ற காய்கறிகளில் கிடைக்கின்றது. கசப்புச்சுவை, சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகவும், உடல் எரிச்சல் இருந்து நிவாரணம் தருகிறது. கூடுதலாக, இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. கசப்பை அதிகமாக உட்கொண்டால், எலும்புகளை பாதிப்பது முதல் உச்சக்கட்டமாய் நினைவாற்ற நிலைக்கு கொண்டு செல்லும் வாய்ப்பும் உள்ளது.

கோப்புப்படம் (Credits - Pexels)

புளிப்புச்சுவை: உணவிற்கு மேலும் ருசி சேர்ப்பது புளிப்புச்சுவை. இவை, பசியுணர்வைத் தூண்டுவதோடு, நரம்புகளை வலுப்பெறச் செய்வது, செரிமானம் மற்றும் இதயத்திற்கு நன்மைகளை தருகின்றது. எலுமிச்சை, இட்லி, தோசை, புளி, மாங்காய், தயிர், மோர் மற்றும் சிட்ரஸ் பழங்களில் புளிப்புச்சுவை உள்ளது. இது அதிகமானால், நெஞ்செரிச்சல், இரத்த கொதிப்பு, அரிப்பு, பற்களைப் பாதிக்கும்.

கோப்புப்படம் (Credits - Pexels)

உவர்ப்புச் சுவை:புளிப்புச் சுவை போலவே பசி மற்றும் செரிமான மேம்பாட்டிற்கு உப்பு சுவை முக்கியமானதாக உள்ளது. இவை, உமிழ்நீரைச் சுரக்கச் செய்வதோடு செரிமானத்திலும் பங்கு வகிக்கின்றது. இவை, இயற்கையாக வாழைத்தண்டு, பூசணிக்காய், சுரைக்காய் போன்றவற்றில் உள்ளது. இவை அதிகமானால், தோல் சுருக்கம் போன்ற தோல் சம்பந்தப்பட்ட நோய்களை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க:கருப்பு திராட்சையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details