சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா ஆறாவது தெருவில் உள்ள ஃபஷீலத்துல் ஜமீலா என்பவருக்குச் சொந்தமான வீட்டை, கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாடகைக்கு எடுத்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஸ்டூடியோவாக பயன்படுத்தி வந்துள்ளார். அந்த வீட்டிற்கு மாத வாடகை ஒரு லட்சத்து 25 ஆயிரம் மற்றும் வைப்புத் தொகை 12 லட்சம் என அக்ரிமெண்ட் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மாத வாடகை ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2023ஆம் ஆண்டு வரை 18 லட்சம் வாடகை பணத்தைச் செலுத்தாமல் அலைக்கழித்ததாகக் கூறி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு வீட்டின் உரிமையாளர் வக்கீல் நோட்டீஸ் ஒன்று அனுப்பி உள்ளார்.
இதையடுத்து, யுவன் சங்கர் ராஜா மொத்த வாடகையான 18 லட்சம் ரூபாய்க்கு ,12 லட்சம் ரூபாய் மட்டும் காசோலையாக வீட்டின் உரிமையாளரிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மீதமுள்ள ஆறு லட்சம் மற்றும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தற்போது வரை 20 லட்சத்திற்கும் மேலான வாடகை பணத்தை கொடுக்காமல் யுவன் சங்கர் ராஜா காலம் தாழ்த்தி வருவதாக வீட்டின் உரிமையாளர் தரப்பில் குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டது.
இந்நிலையில், வீட்டு வாடகை பணம் கொடுப்பது குறித்து சரியான பதில் அளிக்காததால் வீட்டின் உரிமையாளர் திருவல்லிக்கேணி துணை ஆணையர் அலுவலகத்தில் யுவன் சங்கர் ராஜா மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.