ஹைதராபாத்: தெலுங்கில் வெளியான 'லவ் ரெட்டி' படத்தின் ரசிகர்கள் சந்திப்பில் அப்படத்தின் நடிகர் என்.டி.ராமசாமியை ஒரு பெண் கன்னத்தில் அறைந்தார். சுமரன் ரெட்டி இயக்கத்தில் தெலுங்கு நடிகர்கள் அன்ஹா ராமசந்திரா, பல்லவி பர்வா, ஜோதி மடா, என்.டி.ராமசாமி உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ‘லவ் ரெட்டி’ (Love reddy).
இத்திரைப்படம் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் இப்படத்தை பாராட்டியுள்ளார். கிராமத்து பின்னணியில் நடக்கும் காதல் கதையான லவ் ரெட்டி திரைப்படத்தின் ரசிகர்களை படக்குழு சந்தித்தனர். திரையரங்க காட்சிக்கு பிறகு படக்குழு ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது திடீரென்று பார்வையாளர்கள் பகுதியில் இருந்து வந்த பெண், மேடையில் ஏறி நடிகர் என்.டி.ராமசாமியை தாக்கினார். உடனே பக்கத்தில் இருந்த படத்தின் நடிகர்கள் அவரை விலக்கி அழைத்து சென்றனர். லவ் ரெட்டி படத்தில் என்.டி.ராமசாமி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.