சென்னை: கடந்த ஆண்டு வெளியான ’ராயன்’ திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார் தனுஷ். எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், காளிதாஸ், துஷாரா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இது அவரது நடிப்பில் 50வது திரைப்படம். இத்திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து படம் இயக்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறர் தனுஷ்.
பவிஷ், அனிகா, மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் என இளம் நடிகர்களை வைத்து `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார் தனுஷ். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் இருந்து கோல்டன் ஸ்பேரோ மற்றும் யெடி ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த படம் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனுஷ் இயக்கி நடித்து வரும் மற்றொரு படமான ’இட்லி கடை’ வருகிற ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு படங்களும் அடுத்தடுத்து வெளியாகும் அஜித்குமார் படங்களுடன் போட்டியிடுகின்றன.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள ’விடாமுயற்சி’ மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகிறது. அது மட்டுமில்லாமல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் ’குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகிறது. குட் பேட் அக்லியுடன் மோதும் ’இட்லி கடை’ படத்தில் தனுஷே கதாநாயகனாக நடித்திருப்பதால் அதற்கான திரையிடல்களில் பாதிப்பு ஏற்படாது.