சென்னை:தமிழ் சினிமாவில் ஒவ்வொரு இயக்குநர்களும் ஒரு தனிப்பட்ட அடையாளத்துடன் பேசப்படுவார்கள். அப்படித் தமிழ் சினிமாவில் கிராமத்து மண்வாசனை உடைய படங்களை இயக்கி கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் முத்தையா.
குட்டிப்புலி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பின்பு கொம்பன், மருது, விருமன் போன்ற படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைப் பெற்றுள்ளார். இருப்பினும், இவர் தொடர்ந்து ஒரு சமுதாய மக்களை முன்னிறுத்தும் படங்களை இயக்குவதாகக் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இவர் கடைசியாக ஆர்யா நடித்த காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தை இயக்கி இருந்தார். இந்த வரிசையில் இயக்குநர் முத்தையா இயக்கும் அடுத்த படத்தின் மூலம் தனது மகன் விஜய் முத்தையாவை திரையுலகிற்கு அறிமுகப்படுத்த உள்ளார்.
இவருடைய படங்கள் கிராமத்துப் பின்னணியில் படமாக்கப்படும் நிலையில், இந்த படத்தின் கதை மதுரை மாவட்டத்தைச் சுற்றி நகர்வதைப் போன்று எழுதி இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. மேலும், இளைஞர்களை மையப்படுத்திய எமோஷனல் டிராமாவாக இந்தப் படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
விஜய் முத்தையா நாயகனாக நடிக்கும், இந்தப் படத்தில் தர்ஷினி மற்றும் பிரிகிடா சாகா முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க புதுமுகங்களை இந்தப் படத்தில் நடிக்க வைக்க இயக்குநர் முத்தையா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக எடுக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்தப் படத்தின் மிக முக்கிய சண்டைக் காட்சி ஒரு வாரம் படமாக்கப்பட இருக்கிறது. இதற்காகப் பெரும் பொருட்செலவில் சினிமா திரையரங்கை செட்டாக உருவாக்கி உள்ளனர். இந்தப் படத்தை கே.கே.ஆர். சினிமாஸ் சார்பில் ரமேஷ் பாண்டியன் தயாரிக்க இருக்கிறார். படத்தின் ஒளிப்பதிவு பணிகள் எம். சுகுமார் மேற்கொள்ள, வெங்கட்ராஜூ படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். இந்தப் படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். கலை இயக்குநராக வீரமணி கணேசன் பணியாற்ற இருக்கிறார்.
இதையும் படிங்க:சட்ட நடவடிக்கை பாயும்! - அதிமுக முன்னாள் நிர்வாகியின் அவதூறுக்கு த்ரிஷா காட்டமான பதிலடி