சென்னை:இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் 'தங்கலான்'. இப்படத்தில் நடிகைகள் மாளவிகா மோகனன், பார்வதி திருவொத்து ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் பசுபதி, ஹரி கிருஷ்ணன், இங்கிலாந்து நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஸ்டுடியோ கிரீன் (Studio Green) ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 1900ஆம் ஆண்டுகளில் கோலார் தங்க வயல் (KGF - Kolar Gold Field) பகுதியில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றிய படமாக உருவாகி வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்தியா படமாகவும் உருவாகியுள்ளது.
முன்னதாக, படத்திலிருந்து ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், இன்று படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'மினிக்கி மினிக்கி' என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. இப்பாடலில் ஜி.வி.பிரகாஷின் இசை மிகவும் மென்மையாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பாடல் வரிகளை உமா தேவி எழுதி உள்ளார். சிந்துரி விஷால் பாடியுள்ளார். இப்பாடலுக்கு சாண்டி நடனப் பணிகளை கையாண்டுள்ளார். படத்தில் கலை இயக்குநராக எஸ்.எஸ்.மூர்த்தியும், எடிட்டராக செல்வா ஆர்.கே, புகைப்பட இயக்குநராக கிஷோர் குமாரும் பணியாற்றி உள்ளனர்.
இதையும் படிங்க:'சர்தார் 2' ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து; சண்டை பயிற்சியாளர் ஏழுமலை உயிரிழப்பு - Sardaar 2 Shooting Spot Accident