சென்னை: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்ச்சி காமராஜர் அரங்கில் நடைபெற்றது.
அப்போது மேடையில் கண் கலங்கியபடி பேசிய நடிகர் ராதாரவி, "நான் விஜயகாந்த் இவ்வளவு சீக்கிரம் மறைவான் என்று எதிர்பார்க்கவில்லை. நடிகர் சிவாஜிக்கும், விஜயகாந்துக்கும் என்ன சம்மந்தம், ஆனால் அவருடைய இறப்புக்குப் கடைசி வரை இருந்தார் விஜயகாந்த். அவர் மீது ஓரு முறை கல் வீசினார்கள். அந்த விஷயம் தெரிந்ததும் யார் செய்தார்களோ அவர்களை நேரில் சென்று அடித்தோம். இனி விஜயகாந்த் கிடைப்பானா என்று தெரியவில்லை ஆனால் நம்மோடு தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்" என கூறினார்.
இயக்குநர் ஆர்.கே செல்வமணி பேசுகையில், "நடிகர் விஜயகாந்த் பெயரை நடிகர் சங்கம் வளாகத்திற்கு வைக்க வேண்டும். விஜயகாந்த் நடிகர் சங்கத்தில் இருந்ததால் நடிகர் சங்கத்திற்கே பெருமை. புலன் விசாரணை படத்தின் பூஜை டிசம்பர் 28ஆம் தேதி நடைபெற்றது. அதே டிசம்பர் 28ஆம் தேதி விஜயகாந்த் மறைந்தார் அந்த நாளை மறக்க மாட்டேன்" என்றார்.
நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், "இப்படி ஒரு நாளை எதிர்பார்க்கவில்லை. என்னை முதலில் பார்க்கும் போது எப்படி பேசுவாரோ அதே மாதிரி தான் பெரிய நட்சத்திரம் ஆனதுக்கு பிறகும் பேசுவார். பெரிய தலைவர்களுக்கு வரும் கூட்டம் விஜயகாந்துக்கு வந்தது தான் அவர் சேர்த்த சொத்து. அவருடைய நியாயமான கோவம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த துணிச்சல் பல நேரங்களில் நடிகர் சங்கத்திற்கு உதவியாக இருந்தது. Good bye captain" என்றார்.