சென்னை: பிக்பாஸ் சீசன் 8 தமிழ் நேற்று (அக்.06) பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கியது. புதிய தொகுப்பாளர் விஜய் சேதுபதி, புதிய வீடு, ஆட்டம் புதுசு என முதல் நாளிலேயே பரபரப்புடன் இந்த சீசன் தொடங்கியுள்ளது. இந்த முறை தயாரிப்பாளர் ரவீந்திரன், மகாராஜாவில் விஜய் சேதுபதி மகளாக நடித்த சாச்சனா, நடிகை தர்ஷா குப்தா, சத்யா குமார், தீபக், ஆர்ஜே ஆனந்தி, சுனிதா, நடிகர் ரஞ்சித், சௌந்தர்யா, ஜெஃப்ரி, தர்ஷிகா, பவித்ரா ஜனனி, விஜே விஷால், அருண் பிரசாத், அன்ஷிதா, ஆர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகிய 18 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
ஆரம்பம் நாளிலேயே வீடு ஆண்கள், பெண்கள் என்ற கண்டிஷனோடு இரண்டாக பிரிக்கப்பட்டு விவாத்ததுடன் தொடங்கியது. இதற்கு ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போட்டியாளரக்ள் ஒப்புக் கொண்டாலும், ஒரு வாரம் ஆண்கள் எலிமினேஷன் இல்லை என்ற விதிக்கு பல பெண் போட்டியாளர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். இது ஒருபுறம் இருக்க, விஜய் சேதுபதி நேற்று நிகழ்ச்சி முடிவில் முதல் நாள், முதல் எலிமினேஷன் என்ற குண்டை தூக்கி போட்டார்.
பல்வேறு நாடகங்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய விதம் சமூக வலைதளத்தில் பாராட்டைப் பெற்று வருகிறது. குறிப்பாக போட்டியாளர் ரஞ்சித்திடம் விஜய் சேதுபதியின் உரையாடல் தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. நடிகர் ரஞ்சித் ’பொட்டு வச்ச தங்க குடம்’ என்ற பாடலுடன் அறிமுகமானார்.
பின்னர் ரஞ்சித், “காசு சம்பாதிக்க நான் பிக்பாஸ் வீட்டிற்கு வரலை, மக்களோட அன்பை பெற வந்திருகேன்” என்றார். பின்னர் ரஞ்சித்தின் நண்பர் விஜய் சேதுபதியிடம், "சாப்டிங்களா... எங்க ஊர்ல எல்லார்கிட்டயும் கேட்கிற முதல் கேள்வி இதுதான்" என்றார். இதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “எல்லார் ஊர்லயும் அப்படி தான் கேட்பாங்க” என்றார்.