சென்னை:நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் தனது அடுத்தக்கட்ட வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்க உள்ளார். 14 வருடங்கள் பழகிய நண்பரும், தொழிலதிபருமான நிக்கோலாய் சச்தேவ் என்பவரை கரம்பிடிக்க உள்ளார்.
நாளை (ஜூலை 3) அவரது திருமணம் நடைபெறவுள்ள நிலையில், திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் தற்போது ஜோராக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், அவரின் மெஹந்தி விசேஷம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
இருவீட்டார் பெற்றோர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வரலட்சுமியின் திருமணக் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், நடிகை ராதிகா மற்றும் சரத்குமார், மாரி திரைப்படத்தின் 'ரவுடி பேபி' பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர்.
இந்தப் புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் வரலட்சுமி சரத்குமாருக்கு வாழ்த்துக்களைக் குவித்து வருகின்றனர். வரலட்சுமி - நிக்கோலாய் ஜோடியின் திருமணத்தைத் தொடர்ந்து பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் திரையுலகம் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.