சென்னை:மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வாழை' (Vaazhai) திரைப்படத்தின் முதல் பாடல் (தென்கிழக்கு பாடல்) வெளியீட்டு விழா, நேற்று (வியாழன் கிழமை) சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், நடிகர் கலையரசன், நடிகை நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் பேசிய மாரி செல்வராஜ், "பரியேறும் பெருமாள் திரைப்படம் தான் எனது வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுத்த படம். முதலில் வாழை திரைப்படத்தை தான் எடுக்க வேண்டும் என நினைத்தேன். அதுவும் மிகவும் சிறிய பட்ஜெட்டில் பண்ண வேண்டும் என நினைத்தேன். ஆனால், வாழ்க்கையோடு ஒப்பிடும் போது வாழை திரைப்படத்தைக் காத்திருந்து எடுக்க வேண்டும் என நினைத்தேன்.
அதனைத் தொடர்ந்து, பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய திரைப்படங்களை எடுத்தேன். ஆனால், வாழை திரைப்படத்தின் கதை என் மனதை அழுத்திக் கொண்டே இருந்தது. மாமன்னன் படப்பிடிப்பில் இருந்த போது, வாழை கதையை கேட்டவுடனே ஹாட்ஸ்டார் சம்மதம் தெரிவித்துவிட்டனர். மாமன்னன் வெளியீட்டுக்கு முன்னரே இப்படத்தை எடுத்து முடித்து விட்டோம்.
மேடையில் நான் தண்ணீர் குடிக்காமல் பேசினால் நிறைய உண்மைகளை உளறி விடுவேன். பிறகு தான் எனக்கே தெரியும் இவ்வளவு உண்மைகள் என் மனதிலிருந்தது என்று. அது சர்ச்சையாகவும் மாறியுள்ளது. ஏனென்றால், ஒரு கதையை படமாக்குவது என்றால் பதற்றம் இருக்காது. ஆனால் என்னை நானே இயக்குவது என்பதால் தான் இந்த பதற்றம் போகமாட்டுது.