சென்னை: தமிழ் சினிமா ரசிகர்களை பொறுத்தவரை திரையரங்குகளில் படம் பார்ப்பது என்பது அலாதியான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஓடிடியின் வருகைக்குப் பிறகு திரையரங்குகளில் மட்டுமே படம் பார்ப்பது என்பது மாறிவிட்டது. நேரமின்மை, பட்ஜெட் உள்ளிட்ட காரணங்களால் ஓடிடிக்கு ரசிகர்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
வெப் சீரிஸ் போன்றவையும் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கின்றன. திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடினாலும், அப்படம் ஓடிடியில் வெளியாகும் வரை காத்திருக்கும் மனநிலை பார்வையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் தமிழ்ப் படங்கள் பற்றி பார்க்கலாம்.
மெய்யழகன்: 96 திரைப்பட புகழ் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் 'மெய்யழகன்'. கடந்த மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான மெய்யழகன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. குடும்ப உறவுகளை பற்றி பேசிய இப்படம் நீளம் அதிகமாக இருந்தநாக விமர்சனம் எழுந்ததை அடுத்து, படத்தின் நீளம் குறைக்கப்பட்டது.
அதன்பிறகு மெய்யழகன் திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகரித்தது. மெய்யழகன் திரைப்படம் நாளை (அக்.25) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. திரையரங்குகளில் நீளம் காரணமாக நீக்கப்பட்ட காட்சிகளுடன் மெய்யழகன் ஓடிடியில் வெளியாகிறது.
கடைசி உலகப் போர்: ஹிப்ஹாப் ஆதி முதல் முறையாக 'ஹிப் ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட்' சார்பில் எழுதி, இயக்கி, இசையமைத்துள்ள திரைப்படம் "கடைசி உலகப்போர்". மாறுபட்ட களத்தில், போரின் கொடுமைகளை பேசும் அழுத்தமிகு படைப்பாக கடைசி உலகப் போர் திரைப்படம் கடந்த செப் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் நாசர், நட்டி, அனகா, அழகம்பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, கல்யாண் மாஸ்டர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் கடைசி உலகப் போர் திரைப்படம் கடந்த வாரமே அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று(அக்.24) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் ஹிப் ஹாப் ஆதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இவர்களுக்கெல்லாம் ரூ.100 சம்பளம் தானா? அதிர்ச்சி தரும் சினிமா பிரபலங்கள்!
ஐந்தாம் வேதம்: 90களின் புராணத் திரில்லர் சீரிஸான 'மர்மதேசம்' மூலம் புகழ் பெற்றவர் இயக்குநர் நாகா. நாகா இயக்கத்தில் அபிராமி மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள வெப் சீரியஸ் 'ஐந்தாம் வேதம்'. இந்த வெப் சீரியஸில், சாய் தன்ஷிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய் ஜி மகேந்திரன், கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். மொத்தம் 8 எபிசோடுகள் கொண்ட இந்த ஐந்தாம் வேதம்’ வெப் சீரியஸ் நாளை (அக்.25) தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்