சென்னை: இந்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு இதுவரை குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் வெளியான 'அரண்மனை 4' திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்று இந்தாண்டு தமிழ் சினிமாவின் முதல் வெற்றிப் படம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கவின் நடித்த 'ஸ்டார்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில் இந்த வாரம் 'எலெக்ஷன்', 'இங்க நான்தான் கிங்கு', 'படிக்காத பக்கங்கள்' உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன.
இங்க நான்தான் கிங்கு
இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில், நடிகர்கள் சந்தானம், தம்பி ராமையா, பால சரவணன், நடிகை ப்ரியா லயா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இங்க நான் தான் கிங்கு'. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த வாரம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென ரிலீஸ் தேதி மாற்றியமைக்கப்பட்டு இந்த வாரம் வெளியாகிறது. சந்தானம் நடிப்பில் டிடி ரிட்டர்ன்ஸ், வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு இப்படம் வெளியாகிறது. இப்படத்தின் புரொமோ காட்சி ஒன்றில் சந்தானம் ஆபாச வார்த்தை பேசியதாக எழுந்துள்ள சர்ச்சை குறிப்பிடத்தக்கது.
எலெக்ஷன்
சேத்து மான் படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில், உறியடி விஜயகுமார் நடித்துள்ள திரைப்படம் எலெக்ஷன். உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் இந்த வாரம் வெளியாகிறது. இது தேர்தல் காலம் என்பதால் சமீபகாலமாக தேர்தல் தொடர்பான படங்கள் அதிகமாக வெளியாகி வருகின்றன. கடந்த வாரம் வெளியான 'உயிர் தமிழுக்கு' படத்தை தொடர்ந்து இந்த வாரம் 'எலெக்ஷன்' திரைப்படம் ரசிகர்களை கவருமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். இப்படத்தில் அயோத்தி புகழ் ப்ரீத்தி அஷ்ரானி நாயகியாக நடித்துள்ளார்.