சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் 'தி கோட்' திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. இப்படி வசூல் மன்னனாக இருக்கும் போதே அரசியலில் ஈடுபட முடிவு செய்து, 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார்.
கட்சி தொடங்கிய அன்றே 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்திருந்த நிலையில், அதற்கான பணிகளை மும்முரமாக தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். 'கப்பு முக்கியம் பிகிலு' என்ற நோக்குடன் அரசியல் களத்தில் இறங்கி உள்ளார் விஜய்.
சினிமா கேரியரைப் பொறுத்தவரை, தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்து விட்டு முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாக அறிவித்திருந்தார். அந்த வகையில், விஜய்யின் கடைசி படமான 'தளபதி 69' படத்தை இயக்கப் போவது யார்? படம் எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது.
இதையும் படிங்க :தளபதி - 69 ஷூட்டிங் எப்போது தொடங்கும்? - வெளியான புது அப்டேட் - Thalapathy 69 update
அந்த வகையில், தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தான் 'தளபதி 69' படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்தது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, விஜயின் 30 வருட திரைப்பயணத்தை விவரிக்கும் விதமாக, 'ONE LAST TIME' என்ற வீடியோ ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. மேலும், தளபதி 69 பற்றிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் எனவும் அறிவித்திருந்தது.
அதன்படி, விஜய்யின் 69வது படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். அடுத்த வருடம் அக்டோபர் மாதம் படம் வெளியாக உள்ளது என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அந்த போஸ்டரில், 'The Torch Bearer Of Democracy' என்ற வாசகத்துடன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தளபதி 69 படத்தின் கேரக்டர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், படத்திற்கான பூஜை விரைவில் போடப்பட்டு படத்தின் ஷூட்டிங் பணிகளை அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க விஜய் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முழுநேர அரசியலுக்குள் நுழையும் முன் விஜய் நடிக்கவுள்ள கடைசி படம் இது என்பதால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கின்றது.