சென்னை: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிறைவேற்றிய தீர்மானங்களை தயாரிப்பாளர் சங்கம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அதில், "இன்றைய காலகட்டத்தில் ஒரு சில நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஏற்கெனவே அட்வான்ஸ் பெற்ற தயாரிப்பு நிறுவனத்தின் திரைப்படங்களில் பணிபுரியாமல், புதியதாக வரும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்று விடுகிறார்கள்.
இதனால், ஏற்கெனவே அட்வான்ஸ் கொடுத்துள்ள தயாரிப்பாளர்கள் பெரும் பொருளாதார இழப்பை
சந்திக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆகையால், இனிவரும் காலங்களில் எந்த ஒரு நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் பெற்றிருந்தால் அந்த திரைப்படத்தினை முடித்துக் கொடுத்துவிட்டு, அடுத்த திரைப்படங்களின் பணிகளுக்கு செல்ல வேண்டும் என்று இக்கூட்டத்தில் பேசி முடிக்கப்பட்டது.