சென்னை: இமாச்சலப்பிரதேசம், கின்னூர் பகுதியில் உள்ள சட்லஜ் நதியில் கடந்த 4ஆம் தேதி கார் விபத்தில் சிக்கிய சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சென்னை பெருநகர மாநகராட்சியின் முன்னாள் மேயரும், மனிதநேய கல்வி அறக்கட்டளையின் தலைவருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, அவரது நண்பர் கோபிநாத் உடன் இமாச்சலப் பிரதேசத்திற்குச் சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு வாடகை கார் ஒன்றில் கடந்த 4ஆம் தேதி பயணம் செய்து கொண்டிருந்த போது, அவர்கள் சென்ற கார் கின்னூர் பகுதியில் உள்ள சட்லஜ் நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, படுகாயங்களுடன் மீட்கப்பட்ட திருப்பூர் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த வெற்றி துரைசாமியின் நண்பர் கோபிநாத், கின்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே, விபத்தில் சிக்கிய வெற்றி துரைசாமி மட்டும் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து, 8 நாட்களாக நடந்த தொடர் தேடுதல் வேட்டைக்குப் பிறகு அவரது உடல் சட்லஜ் நதியில் இருந்து 5 கி.மீ தொலைவில் கண்டெடுக்கப்பட்டது. பின்னர், சென்னை கொண்டு வரப்பட்ட அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இயக்குநர் வெற்றிமாறனின் பன்னாட்டுத் திரை-பண்பாடு ஆய்வகம் [IIFC] சார்பில் மறைந்த வெற்றி துரைசாமிக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தாணு, இயக்குநர் வெற்றிமாறன், அவரது மனைவி ஆர்த்தி வெற்றி மாறன், பேராசிரியர் ராஜநாயகம், முன்னாள் ராணுவ வீரர் மதன்குமார், மருத்துவர் வந்தனா, ஜெகதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் தாணு பேசும் பொழுது, "வெற்றி துரைசாமி மறைவால் மிக மிக சொல்லொணாத் துயரத்திற்கு ஆளானேன். அவருடன் பழகிய காலங்கள் சிறப்பான காலங்கள் ஆகும். இந்த பன்னாட்டுத் திரை மற்றும் பண்பாடு ஆய்வகம் திறப்பதற்கு நான் கொடுத்த தொகை மிகப் பெரிய உதவியாக இருந்ததாக மீண்டும் மீண்டும் நன்றி கூறினார்.
எப்பொழுது எனக்கு ஒரு கதையைத் தயார் செய்யப் போகிறாய் என்று நான் கேட்டதற்கு, வெற்றி துரைசாமி வெற்றிமாறனின் முழு சம்மதத்துடன் தான் தங்களிடம் வந்து படத்திற்கான கதையைக் கூறுவேன் என்று கூறினார். பக்தியுடனும் பாசத்துடனும் வெற்றிமாறனை குருவாகப் பாவித்துக் கொண்டிருந்தார். அவருடைய தந்தையார் எனக்கு மிகவும் நெருக்கமானவர், அவருக்கு இது பேரிழப்பாகும் எந்த தந்தைக்கும் இப்படி ஒரு துயரம் நிகழக் கூடாது" என்று கூறினார்.