சென்னை : ஞானவேல் ராஜா தயாரிப்பில், சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கங்குவா. இப்படம் வெளியான முதல் நாளிலே எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக படத்தை பார்த்து வந்த ரசிகர்கள் மோசமான வார்த்தைகளில் படத்தை பற்றி கருத்து தெரிவித்திருந்தனர்.
இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தனது ஆதங்கத்தை தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ஆடியோ வாயிலாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், கண்டன அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், "திரைப்படங்களின் நிறை குறைகளை விமர்சிக்க அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால், அது திரைப்படத்தை பற்றி மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், கதாநாயகர் மீது தனிமனித தாக்குதல்கள் மற்றும் அவர்கள் மீது இருக்கும் வன்மத்தை பொதுவெளியில் கக்க ஒரு கருவியாக, திரைப்பட விமர்சனத்தை சில ஊடகங்கள் சமீப காலங்களில் பயன்படுத்தி வருவதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
திரைத்துறை விமர்சகர்கள் தராசு போல ஒரு திரைப்படத்தின் நிறை, குறைகளை சொல்லி மொத்தத்தில் தங்களின் அபிப்பிராயத்தை சொல்லலாமே தவிர, அதை ஒட்டு மொத்தமாக ஒழிக்கும் விதத்தில் கடுமையாக விமர்சனம் செய்து, தனிமனித தாக்குதல்களும் செய்வது, திரைப்பட துறையை மொத்தமாக அழிக்கும் செயலாக நமது சங்கம் கருதுகிறது. அவ்வாறு செய்து வரும் ஊடகவியலாளர்கள் மீது தனது கண்டனத்தை நமது சங்கம் தெரிவிக்கிறது.
ஒரு திரைப்படத்தை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும். விமர்சகர்கள் தங்களின் கருத்துக்களை அனைவரின் கருத்தாக மக்களிடம் கொண்டு செல்வது தவிர்க்கப்பட வேண்டும். ஒரு படம் ஏமாற்றி விட்டதாக இந்தளவுக்கு கொந்தளித்து பேசி வரும் பலர் (பார்வையாளர்கள் உட்பட), நம்மைச் சுற்றி நடக்கும் எத்தனையோ அநீதிகளை, அத்துமீறல்களை, மோசடிகளை கண்டும் காணாமல் கடப்பதையும் நாம் பார்த்து வருகிறோம்.
இதையும் படிங்க :சோளிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயிலில் 'கங்குவா' இயக்குநருடன் நடிகர் சூர்யா சாமி தரிசனம்!
ஒரு திரைப்படத்தை மூன்று மணி நேரம் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பார்க்காமல், அது ஏதோ மொத்த சமுதாயத்திற்கும் அநீதி விளைவித்தது போல பலர் பேசி வருவது அநீதியான செயல் என்று கருதுகிறோம். விமர்சகர்களுக்கு திரைப்படங்களை விமர்சனம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது.
ஆனால், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஒரு திரைப்படத்தை பற்றிய வெறுப்பை ஊடங்களில் விதைக்கக் கூடாது என்பதை அனைத்து ஊடகவியலாளர்களும் மனதில் வைத்து திரைப்பட விமர்சனங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இந்த சினிமா துறையால் வாழ்ந்து வரும் ஊடகவியலாளர்கள் இனிமேலாவது தங்களை திருத்தி கொண்டு, சரியான முறையில் விமர்சனங்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
அதே சமயம், திரையரங்குகளுக்கு வெளியே திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன், பார்வையாளர்களின் கருத்துக்களை பதிவு செய்து வரும் பல YouTube Channel-கள், எல்லை மீறி கருத்துக்களை சொல்லும் பார்வையாளர்களை ஊக்குவித்து, அதை தொடர்ந்து வெளியிட்டு, அதிக அளவில் அத்தகைய கருத்துக்களை, ஏதோ அனைத்து பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உலக அளவில் அதை எடுத்து செல்வது மிகவும் கண்டிக்கத்தக்கது.