சென்னை: தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து, அவர்கள் மனதில் இடம்பிடித்து நீண்ட காலம் உச்ச நட்சத்திரமாக நீடிப்பது எளிதான காரியமல்ல. அதுவும் 50 படங்களுக்கு மேல் நடிப்பது நடிகர்களின் திரை வாழ்வில் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் இன்று வரை உச்சத்தில் இருக்கும் வசூல் நாயகர்களாக பல நடிகர்கள் உள்ளனர். அந்த வரிசையில் உள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோரின் 50வது படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு குறித்து இந்த செய்திக்தொகுப்பில் காணலாம்.
ஆறிலிருந்து அறுபது வரை: பிரபல நடிகர் ரஜினிகாந்த் தமிழில் கதாநாயகனாக நடித்து வெளியான 50வது திரைப்படம் ‘ஆறிலிருந்து அறுபது வரை’. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் இப்படம் செப்டம்பர் 14ஆம் தேதி 1979 இல் வெளியானது. இப்படத்தில் ரஜினிகாந்துடன் ஜெயா, சங்கீதா, படாபட் ஜெயலட்சுமி, சோ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரஜினிகாந்த் சந்தானம் என்ற கதாபாத்திரம் 6 வயதில் தனது பெற்றோரை இழந்து 60 வயதில் மரணத்தை தழுவும் ஒரு சராசரி ஏழை மனிதனின் வாழ்க்கை தான் இப்படத்தின் கதை.
பொதுவாக கமர்ஷியல் ஹீரோக்கள் தங்களது 50வது படங்களை வசூல்ரீதியாக வெற்றி பெற வேண்டும் என அதற்கேற்றவாறு கதையை தேர்வு செய்து நடிப்பது வழக்கம். ஆனால் ரஜினிகாந்த், கதாபாத்திர முக்கியத்துவம் வாய்ந்த படமாக 'ஆறிலிருந்து அறுபது வரை' படத்தை தேர்வு செய்தது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.
மூன்று முடிச்சு: நடிப்பு, இயக்கம், இசை, தயாரிப்பு என சினிமாவில் அனைத்து துறையிலும் அசத்தும் நடிகர் கமல்ஹாசனின் 50வது திரைப்படம் 'மூன்று முடிச்சு'. இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கத்தில் 1976ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் 'மூன்று முடிச்சு'. இப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். கமலுக்கு இது 50வது படம் என்றாலும் அவர் படத்தில் சிறிது நேரம் தான் தோன்றுவார்.
ஆனால் கமலின் கதாபாத்திரம் இப்படத்தில் மையப்புள்ளியாக விளங்கும். அதே நேரத்தில் ரஜினிகாந்த் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சினிமாவில் அறிமுகமாகி சில மாதங்களில் ரஜினிகாஎதிற்கு இப்படம் திருப்புமுனையாக அமைந்தது. மேலும் இப்படத்தில் ஸ்ரீதேவியின் நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. அதுவரை குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஸ்ரீதேவி மூன்று முடிச்சு படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
சுறா: எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த அவரது 50வது திரைப்படம் 'சுறா'. 2010இல் வெளியான இப்படத்தில் தமன்னா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான சுறா பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்த தவறியது. இப்படத்தின் காமெடி காட்சிகள், மணிசர்மா இசையமைப்பில் பாடல்கள் வரவேற்பைப் பெற்றாலும் திரைக்கதையில் ரசிகர்களின் கவனம் ஈர்க்க தவறியது.