சென்னை: சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம் நடிப்பில் 2013-ஆம் ஆண்டு உருவான 'மதகஜராஜா' திரைப்படம், 12 ஆண்டுகள் கழித்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதைப் போலவே பல்வேறு வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் படங்கள் வெளியாக வாய்ப்புள்ளதா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கி மம்முட்டி நடித்துள்ள ‘டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ எனும் மலையாளத் திரைப்படம், ஜனவரி 23ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் புரோமோசனில் பல வருடங்களாக வெளியிடப்படாமல் இருக்கும் கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ குறித்து கேட்கப்பட்டது.
அப்போது துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் சூர்யா நடிக்காதது குறித்து பேசிய அவர், “நடிகர்கள் சில படங்களில் நடிக்க ஒத்துக்கொள்ளாமல் இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் சில நேரங்களில் புரிந்துகொள்ளவும் நான் விரும்புவதில்லை. சூர்யா துருவ நட்சத்திரத்தில் நடிப்பதற்கு யோசித்திருக்கவே கூடாது என்றுதான் நான் நினைத்தேன்.
துருவ நட்சத்திரம்
ஏனென்றால், ‘காக்க காக்க’ மற்றும் ‘வாரணம் ஆயிரம்’ என இரண்டு திரைப்படமும் அப்படித்தான் முன் யோசனை எதுவுமில்லாமல் உருவாக்கப்பட்டது. ’வாரணம் ஆயிரம்’ படத்தின் அப்பா கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் நானா படேகர் மற்றும் மோகன்லால் ஆகியோரிடம்தான் போய் கதை சொன்னேன். எல்லோரும் அவர் அவர்களுக்கென்று ஒரு காரணத்தை சொன்னார்கள். இதன்பின் சூர்யா நானே அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன் என்றார்.
அவருக்கு அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என தைரியம் இருந்தது. அதை நம்பி அந்த படத்தை உருவாக்கினோம். ஆனால், ’துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை அவர் தேர்வு செய்யவில்லை. துருவ நட்சத்திரத்தின் ஐடியாவை கேட்டார், கதை கேட்டார், படம் குறித்து நிறைய விவாதித்தோம். இந்த படம் எப்படியான படமாக இருக்கும் என கேட்டுக் கொண்டே இருந்தார். என்னிடம் அதற்கு பதில் இல்லை. ஆனால் அவர் இருந்தால் சிறப்பான படம் ஒன்றை செய்திருப்போம்.