ஹைதராபாத்: சூர்யா, ஜோதிகா நட்சத்திர தம்பதியினர் கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகா கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, நட்டி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்த கங்குவா திரைப்படம் கடந்த நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.
கிட்டதட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா திரைப்படம் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியான நிலையில், எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கங்குவா குறித்து அதிகமாக மீம்ஸ் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் கங்குவா படத்திற்கு கிடைத்த எதிர்மறை விமர்சனங்களுக்கு நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா எதிர்ப்பு தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.
மேலும் ஆன்லைன் விமர்சனங்களால் பெரிய பட்ஜெட் படங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் இந்தியன் 2, வேட்டையன், கங்குவா ஆகிய படங்களின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இது மட்டுமின்றி திரைப்படம் குறித்த ஆன்லைன் விமர்சனம் படம் வெளியாகி ஒரு வாரத்திற்கு பிறகு தான் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.