சென்னை:முரளி மற்றும் வடிவேலு இணைந்து நடித்து 2002 ஆம் ஆண்டு வெளியான 'சுந்தரா டிராவல்ஸ்' படம் பட்டி தொட்டி எங்கும் மாபெரும் வெற்றி பெற்று மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் நகைச்சுவை காட்சிகளை அன்று முதல் இன்று வரை யாராலும் மறக்க முடியாது. முரளி-வடிவேலு கூட்டணியில் அனைத்து நகைச்சுவை காட்சிகளும் எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம்.
முரளி, வடிவேலு மட்டுமல்லாமல் வினு சக்ரவர்த்தி, மணிவண்ணன், டெல்லி கணேஷ், இளவரசு, ராதா, பி.வாசு என ஒரு பட்டாளமே இந்த படத்தில் நடித்திருப்பார்கள். திலீப், அசோகன் நடித்த`ஈ பறக்கும் தளிகா' (Ee Parakkum Thalika) எனும் மலையாளப் படத்தின் ரீமேக்காக உருவானதுதான் சுந்தரா டிராவல்ஸ். மலையாள இயக்குநரான தஹா இந்த படத்தை இயக்கியிருப்பார்.
தற்போது ’சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு ‘சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட்’ என்று தலைப்பிட்டுள்ளனர். முதல் பாகத்தின் முரளி-வடிவேலு கூட்டணிக்கு பதிலாக கருணாஸ் மற்றும் கருணாகரன் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். அவர்களோடு ஆடுகளம் முருகதாஸ், சாம்ஸ், ரமா, வின்னர் ராமச்சந்திரன், சிசர் மனோகர், ஆகியோர் நடிக்கிறார்கள்.