தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பாலியல் குற்றம் புரிந்தால் நடிக்க தடை... தென்னிந்திய நடிகர் சங்கம் அதிரடி தீர்மானம்! - South Indian actors association - SOUTH INDIAN ACTORS ASSOCIATION

South Indian actors association Resolution: பெண் நடிகைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பட்சத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி
தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 4, 2024, 7:59 PM IST

சென்னை: மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக கேரள அரசு வெளியிட்ட ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பிரபல மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, சித்திக், பாபுராஜ் உள்ளிட்ட பலர் மீதும் மலையாள நடிகைகள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.

இதன் விளைவாக, மலையாள நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுவினர் மற்றும் நடிகர்கள் உட்பட 17 பேர் ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. திரைத்துறையில் இந்த சம்பவம் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து நடிகைகள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
விசாகா கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெண் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக கடந்த 22.4.2019 அன்று SIAA-GSICC கமிட்டி சங்கத்தின் சார்பில் உருவாக்கப்பட்டது.

இந்த கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் தி.நகர், நாம் பவுண்டேஷன் அரங்கில் இன்று காலை நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் கமிட்டி தலைவர் ரோகிணி தலைமையில் உறுப்பினர்களான சுஹாசினி, குஷ்பூ , லலிதா குமாரி, கோவை சரளா மற்றும் சமூக செயற்பாட்டாளர் ராஜி கோபி ஆகியோர் முன்னிலையில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கமிட்டியில் ஒரு வழக்கறிஞரை நியமனம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது.

தென்னிந்திய நடிகர் சங்கம் தீர்மானம் (Credits - ETV Bharat Tamil Nadu)
தென்னிந்திய நடிகர் சங்க தீர்மானங்கள்

1. பாலியல் புகார்களில் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களின் அடிப்படையில் குற்றம் புரிந்தவர்களை விசாரித்து, புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஐந்து ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்றுவதில் இருந்து தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கத்துக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

2. பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் தருவதில் இருந்து அவர்களுக்கு சட்டரீதியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் கமிட்டி செய்யும்.

3. பாலியல் குற்றங்களில் புகார் கூறப்படும் நபர்கள் மீது முதலில் எச்சரிக்கை விடப்படும். பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

4. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க வசதியாக தனி தொலைபேசி எண் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. தற்போது இ - மெயில் மூலமாக புகார் அளிக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

5. பாதிக்கப்பட்டவர்கள் இந்த கமிட்டி மூலம் தங்கள் புகார்களை அளிக்கவும், அதை விடுத்து நேரடியாக மீடியாக்களில் பேச வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

6. யூடியூபில் திரைத் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதூறாக பதிவிடப்படுவதால் பாதிக்கப்படுபவர்கள் சைபர் கிரைம் பிரிவு காவல்துறையில் புகார் அளித்தால் கமிட்டி அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

7. மேலும் கமிட்டியின் நடவடிக்கைகளை தென்னிந்திய நடிகர் சங்கம் நேரடியாக கண்காணிக்கும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:கமல்ஹாசன் இடத்தில் விஜய் சேதுபதி... பிக்பாஸ் 8 நிகழ்ச்சி ஸ்பெஷல் ப்ரோமோ வெளியீடு! - vijay sethupathi

ABOUT THE AUTHOR

...view details