சென்னை:ஏஜிஎஸ் நிறுவனம் அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மோகன், பிரசாந்த், சினேகா, பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கோட் (Greatest of all time) திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளதால் நடிப்புக்கு விடை கொடுக்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில், கோட் படத்தோடு சேர்த்து எச்.வினோத் இயக்கத்தில் மேலும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் கோட் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
அதே நேரத்தில், கோட் படத்தில் இருந்து வெளியான மூன்று பாடல்களும் இதுவரை எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால், கோட் படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், ரசிகர்களுக்கு குறையாக இருந்த விஜய்யின் De -ageing செய்யப்பட்ட தோற்றம், நன்றாக பட்டை தீட்டப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்ட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பதால் மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தமிழக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளார். இதனையடுத்து விநியோகஸ்தர் ராகுல் மதுரை, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் 700 ரூபாய்க்கு டிக்கெட்டை விற்க கட்டாயப்படுத்துவதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து ராகுலிடம் ஈடிவி பாரத் கேட்டபோது, "தமிழ்நாட்டில் உள்ள 1,100 திரைகளிலும் கோட் திரைப்படம் வெளியாக உள்ளது. இன்று மாலை முதல் அனைத்து ஏரியாவுக்குமான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கும்" என்றார்.