சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், நடிகர் விஜய். தற்போது விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கோட்' (The Greatest of All Time - G.O.A.T) என்ற படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 68வது படமாக உருவாகி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் 'தமிழக வெற்றி கழகம்' (Tamilaga Vetri Kazhagam) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார், விஜய்.
கட்சி தொடங்கியது குறித்து தனது X வலைத்தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், 'தான் ஒப்புக்கொண்டுள்ள படத்தின் பணிகளை முடித்து விட்டு, முழு நேர அரசியலில் ஈடுபடுவதாக' அறிவித்திருந்தார். இதனையடுத்து விஜய்யின் கடைசி படத்தை யார் இயக்குவார்கள்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.
அதோடு அது அரசியல் படமாக இருக்குமா? என ஆர்வத்துடன் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் விஜய்யை வைத்து இயக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் பரவியது. ஆனால், அது தற்போது வரை உறுதியாகவில்லை.
இந்த நிலையில், தற்போது மற்றொரு செய்தியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அது என்னவென்றால், இயக்குநர் வெற்றிமாறன் விஜய்யின் கடைசி படத்தை இயக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதற்கிடையே, இயக்குநர் வெற்றிமாறன் ஏற்கனவே, விஜய்க்கு ஒரு கதை சொல்லியிருக்கிறார். அது 'அரசியல்' கதை எனவும், அதில் விஜய் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தில் பிஸியாக உள்ளார். அதனை முடித்துவிட்டு வாடிவாசல், வட சென்னை 2 ஆகிய படங்களை இயக்க உள்ளார். இதற்கிடையில் விஜய்யை வைத்து திரைப்படம் இயக்குவாரா? எனத் தெரியவில்லை.
ஆனால் விஜய்யின் கடைசி படத்தைத் தெலுங்கில் ஆர்ஆர்ஆர் படத்தைத் தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான டிவிவி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது எனவும் பேசப்படுகிறது. இதற்கு முன்னதாக, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்து வெளியான லியோ திரைப்படம் வெற்றியைத் தேடி தந்ததோடு, வசூலிலும் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தெருக்கூத்து கட்டும் சென்னை மருத்துவர்!