சென்னை: சுதா கொங்குரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் சுதா கொங்குரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படத்திற்கு ‘SK25’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. ஜீவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படம் சிவகார்த்திகேயனின் 25வது படமாகும்.
மிகப்பெரும் பொருட்செலவில் வரலாற்று திரைப்படமாக உருவாகிறது. மேலும் இப்படத்தில் ஜெயம் ரவி, சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகவும், அதர்வா சிவகார்த்திகேயனுக்கு தம்பியாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் 25வது படத்திற்கு ’பராசக்தி’ என தலைப்பிடப்பட்டுள்ளதாகவும், அதன் அறிவிப்பு வீடியோ வரும் பிப்ரவரி 17ஆம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் டைட்டில் அறிவிப்பு வீடியோ தணிக்கை செய்யப்பட்டு, அதன் சான்றிதழ் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. முன்னதாக இயக்குநர் சுதா கொங்குரா இயக்கத்தில் சூர்யா, துல்கர் சல்மான், நஸ்ரியா ஆகியோர் புறநானூறு என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது. பின்னர் அப்படம் கைவிடப்பட்ட நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு புறநானூறு என தலைப்பிடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது தலைப்பு மாற்றபட்டுள்ளது.