சென்னை:ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், ஷங்கர், சித்தார்த் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய நடிகர் சித்தார்த், "படத்தின் மொத்த அனுபவமும் கனவு உலகம் மாதிரி தான் இருந்ததாக தெரிவித்தார். இந்த மேடையில் இவர்கள் உடன் சேர்ந்து உட்கார்ந்து இருப்பது பெரிய பாக்கியமாக கருதுவதாக தெரிவித்தார். நான் ஒரு நடிகனாக இருப்பதற்கு காரணமே நடிகர் கமல் சார் தான் என்று கூறினார்.
22 வருடம் கழித்து இயக்குநர் ஷங்கர் தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தந்திருப்பதாக தெரிவித்தார். ஷங்கர் சார் வாய்ப்பு கொடுத்தாலே அது பெரிய விஷயம் தான் என்றும், பாய்ஸ் படத்தில் துவங்கிய பயணம் இந்தியன் 2 வரை தொடர்கிறது என்று தெரிவித்தார். தினமும் சினிமாவில் ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஷங்கர் சார் மற்றும் கமல் சாரிடம் தான் கற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.
இப்படம் சமூக கருத்து, சமூக அக்கறை குறித்த படம் எனவும், இப்படத்தில் சில முக்கியமான விஷயங்களைச் சொல்லி இருப்பதாகவும் தெரிவித்தார். ஊழலைப் பற்றி அழுத்தமாக இப்படம் சொல்லியிருக்கிறது என்றும், இந்தியன் நான்காம் பாகத்திலும் நான் இருப்பேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:மீண்டும் காதல் கதையில் சித்தார்த்.. “மிஸ் யூ” படத்தின் சுவாரஸ்ய அப்டேட்!