பெங்களூரு: கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு அமெரிக்காவில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமாருக்கு சிறுநீரக புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து சிவராஜ்குமார் சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்காவிற்கு கடந்த டிசம்பர் 18ஆம் தேதி புறப்பட்டு சென்றார்.
அமெரிக்காவில் மியாமி மாகாணத்தில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் சிவராஜ்குமார் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் முருகேஷ் மனோகர் மேற்பார்வையில் சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சிவராஜ்குமாருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து பேட்டி அளித்த மருத்துவர் முருகேஷ் மனோகர் பேசுகையில், “சிவராஜ்குமாருக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சிறுநீரகம் அகற்றப்பட்டுள்ளது. சிவராஜ்குமாருக்கு செயற்கை சிறுநீரகப்பை பொருத்தப்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்கு பிறகு நன்றாக உள்ளார்.
சிவராஜ்குமார் விரைவில் குணமடைந்து, சில வாரங்களில் தனது அன்றாட வேலைகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கிறேன்” என கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து சிவராஜ்குமார் புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகு நலமாக இருப்பதாக அவரது மனைவி கீதா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களில் தனது ரசிகர்களிடம் வீடியோ மூலம் பேசுவார் என கூறியுள்ளார்.