சென்னை: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படத்திற்கு ‘சூர்யா 45’ என தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகை த்ரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்போது கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘சூர்யா 45’ படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் அறிவிக்கப்பட்டிருந்தார். பட அறிவிப்பின் போது அவர் பெயர் போட்ட போஸ்டர்கள் வெளியானது. மேலும் ஆர்.ஜே.பாலாஜி ஒரு நேர்காணலிலும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதை உறுதிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் ‘சூர்யா 45’ படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது ‘சூர்யா 45’ படத்திற்கு புதிய இசையமைப்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ‘சூர்யா 45’ படத்தின் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.