தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

“வெற்றிப் படம் கொடுத்து விட்டால் ஹீரோ, இயக்குநர் எல்லாம் ஆடுகின்றனர்” - ஆர்வி உதயகுமார் கருத்து!

Kaduvetti: இயக்குநர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில், நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் காடுவெட்டி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் ஒரு வெற்றிப்படம் கொடுத்துவிட்டால் இயக்குநரும், ஹீரோவும் என்ன ஆட்டம் ஆடுகிறார்கள் தெரியுமா என பேசினார்.

Kaduvetty audio launch
காடுவெட்டி இசை வெளியீட்டு விழா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 3, 2024, 5:14 PM IST

சென்னை:தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காடுவெட்டி'. இந்த படத்தை இயக்குநர் சோலை ஆறுமுகம் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் இன்று (மார்ச் 3) நடைபெற்றது.

அப்போது மேடையில் பேசிய ஜாக்குவார் தங்கம், “காடுவெட்டி என்ற தலைப்பு என்னிடம்தான் இருந்தது. அந்த பெயரை யாரும் தவறாக பயன்படுத்தக்கூடாதென யாருக்கும் தராமல் இருந்தேன். அவரை வைத்துதான் இந்த படம் உருவாவதாக சொன்னதால் மட்டுமே, காடுவெட்டி தலைப்பை இயக்குநருக்கு கொடுத்தேன். சரியான தலைப்பு, சரியான நேரத்தில், சரியான நபருக்கு கிடைத்திருக்கிறது. படக்குழுவினருக்கும், ஆர்.கே.சுரேஷ்-க்கும் வாழ்த்துக்கள்" என்றார்.

மேடையில் பேசிய இயக்குநர் பேரரசு, "தளபதி விஜய்க்காக, ரஜினிக்காக சேர்ந்த கூட்டம் போல இல்ல, காடுவெட்டிக்காக சேர்ந்த கூட்டம். இதுவரை வில்லனாக நடித்து இந்த படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் மாபெரும் வெற்றியடைய வேண்டும்.

தமிழ் சினிமாவில் பல காதல் படங்கள் வந்திருக்கிறது. மக்கள் காதல் திரைப்படங்களை விரும்பி பார்ப்பார்கள். ஆனால், இது ஒரு காதல் விழிப்புணர்வு படம். பெற்றோர்கள் முக்கியமாக பார்க்க வேண்டிய படம். ஒரு பெண்ணிடம் மனதை பறிகொடுப்பதுதான் காதல்.

பெண்களை ஏமாற்றி பயன்படுத்திக் கொள்வது காதல் அல்ல. பெண் உரிமையை மீட்டதாக சொல்வதெல்லாம் பொய். அரசியல் பிரமுகர் குடித்து கும்மாளம் அடித்தது முக்கியமல்ல. அந்த நடிகை உண்மையா பணம் வாங்குனாங்களா? போனாங்களா? இதுதான் முக்கியமா பேசுறாங்க. பெண்களுக்கான இந்த படம் வெற்றி பெற வேண்டுமென வாழ்த்தினார்".

மேடையில் பேசிய ஸ்ரீகாந்த் தேவா, "ஒரு நல்ல கருத்துள்ள படம் இது. இயக்குநருக்கு வாழ்த்துக்கள். ஆர்.கே.சுரேஷ் உண்மையாகவே ஒரு சிங்கம். காடுவெட்டி திரைப்படத்தை மக்கள் அனைவரும் திரையில் பார்த்து ரசிக்க வேண்டுமெனக் கூறினார்".

மேடையில் பேசிய இயக்குநர் மோகன் ஜி, "இந்த படத்தைக் கொண்டாடும் ரசிகர்களுக்கு நன்றி. திரௌபதி மறுமலர்ச்சிக்குப் பிறகு, பெரிய வெற்றியடையப் போகும் படம் காடுவெட்டி. சினிமாத் துறை எங்களைப் போன்றோர்களை வரவேற்காது, எங்களைக் கொண்டாட இந்த கூட்டம் இருப்பதால்தான் நான் இங்கு இருக்கிறேன்.

பணக்கார பெண்களைக் குறிவைத்து காதலிப்பவரை முதலில் தட்டிக்கேட்டவர் காடுவெட்டி. அந்த பாணியில் இந்த படம் இருக்கும். என்னுடைய அடுத்த படத்தின் அப்டேட் விரைவில் வெளியிடுகிறேன். முதலில் காடுவெட்டி திரைப்படத்தைக் கொண்டாடுங்கள்" என்றார்.

மேடையில் பேசிய ஆர்.வி.உதயகுமார், "காடுவெட்டி ட்ரைலர் வெளியிட்டு விழாவுக்கு வந்தால், இத்தனை காடுவெட்டிகள் இங்கு வந்திருக்கிறார்கள். காதலுக்காக சின்ன கவுண்டர் என்ற ஒரு படம் எடுத்தேன். அந்த படம் இன்றுவரை பேசும் பொருளாக இருக்கிறது.

ஒரு வெற்றிப்படம் கொடுத்துவிட்டால் இயக்குநரும், ஹீரோவும் என்ன ஆட்டம் ஆடுகிறார்கள் தெரியுமா? உன் அடக்கம் பெரிய வெற்றியைத் தரும் என்று இயக்குநர் சோலை ஆறுமுகத்தைப் பாராட்டினார். ஆர்.கே.சுரேஷ்-க்குள் ஒரு ரஜினி இல்லை; ஒன்பது ரஜினி இருக்கிறார்.

ஆர்.கே.சுரேஷ் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். இயக்குநர் பேரரசு, அந்த காலகட்டத்தில் நடிகர் விஜயை வைத்து வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். இன்று நடிகர் விஜய்க்கு ஒரே ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். மீண்டும் விஜய் - பேரரசு கூட்டணி நடக்க வேண்டும். வளர்ந்த பிறகு முன்னணி நடிகர்கள் இயக்குநர்களை மறந்துவிடுவது வருத்தம் அளிக்கிறது" என்றார்.

மேடையில் பேசிய படத்தின் இயக்குநர் சோலை ஆறுமுகம், "முதலில் இந்த படத்திற்கு வந்த சிக்கல் படத்தின் தலைப்புதான். காடுவெட்டி என்ற பெயரின் காரணத்தை தெளிவுபடுத்திய பிறகே, இது சாத்தியமானது. படத்தில் ஆர்.கே.சுரேஷ் பயன்படுத்தும் வாகனத்தில் சிங்கம் பொறிக்கப்பட்ட சின்னம் இருக்கக்கூடாது. சில தலைவர்களின் படங்களைப் பயன்படுத்தக் கூடாதென பிரச்னை வந்தது. கதையேக் கேட்காமல் காடுவெட்டி என்ற பேருக்காக இந்த படத்தை சம்மதித்த ஆர்.கே.சுரேஷ்-க்கு நன்றி" எனக் கூறினார்.

மேடையில் பேசிய நடிகர் ஆர்.கே.சுரேஷ், "என்னைப் பற்றிய தவறான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 15 வருடங்களாக நான்பட்ட கஷ்டம் என்ன ஆவது? நான் அப்படிச் செய்வேனா? லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்து விமான நிலையத்தில் வைத்து கைது செய்து விசாரணை நடத்தி, ஒரு நல்ல தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள் நன்றி.

காடுவெட்டி என்ற படத்தில் நான் நடிப்பது பெருமை அளிக்கிறது. இந்த படம் என் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பெருமை சேர்க்கும். இப்போதெல்லாம் பேசுவதே இல்லை, எது பேசினாலும் தவறாகி விடுகிறது. நான் சாதி பேசுபவன் அல்ல. நான் பொதுவானவன். இந்த படமும் சாதி[ படம் இல்லை. எல்லா சமூகத்திற்குமான படம் இது. இசையமைப்பாளர் எனக்கு இசையமைக்கவில்லை, காடு வெட்டியாருக்கு இசையமைத்திருக்கிறார், ரசிகர்களுக்கு நன்றி" எனக் கூறினார்.

இதையும் படிங்க:ஜாம்நகரில் ரஜினிகாந்த்.. ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் இருபெரும் சூப்பர் ஸ்டார்கள்!

ABOUT THE AUTHOR

...view details