சென்னை:சினிமா நிறுவனமான PVR INOX Limited, பழம்பெரும் தெலுங்கு நடிகரான அக்கினேனி நாகேஸ்வர ராவின் (ANR) 100 ஆவது பிறந்த நாளில் அவரை நினைவுகூரும் வகையில் திரைப்பட விழாவை அறிவித்துள்ளது. இந்த மூன்று நாள் திரைப்பட விழா செப்டம்பர் 20 முதல் 22 செப்டம்பர் 2024 வரை நடைபெறும். இதன் மூலம் ANR-ன் சின்னப் படங்களின் மாயாஜாலத்தை பெரிய திரையில் மீண்டும் அனுபவிக்கும் அரிய வாய்ப்பை ரசிகர்களுக்கு PVR INOX Limited வழங்குகிறது.
ஃபிலிம் ஹெரிடேஜ் அறக்கட்டளையுடன் இணைந்து, தேவதாசு, மாயாபஜார், பார்யா பார்த்தலு, குண்டம்மா கதை, டாக்டர் சக்ரவர்த்தி, சுடிகுண்டலு, பிரேமாபிஷேகம், மண் பிரேம் நகர் உள்ளிட்ட ANR-இன் மிகவும் பிரபலமான திரைப்படங்களை காட்சிப்படுத்துகிறது. இவ்விழா 31 நகரங்களில் நடைபெறுகிறது.
இதுகுறித்து பிவிஆர் ஐநாக்ஸின் சிஇஓ, கௌதம் தத்தா தெரிவிக்கையில், "அக்கினேனி நாகேஸ்வர ராவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதில் பெருமையடைகிறோம். அவருடைய சினிமா பயணம் பழம்பெருமைக்கு குறையாதது. அவரது நடிப்பு தலைமுறைகளை தாண்டியது. மேலும், அவரது படங்கள் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களை ஊக்கப்படுத்துகின்றன. இந்த விழா அவரது மகத்தான மரபுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க :நடிகை அதிதி ராவை கரம் பிடித்த சித்தார்த்.. ஹைதராபாத்தில் நடந்த திருமணம்! - Actor Siddharth married Aditi Rao
ஃபிலிம் ஹெரிடேஜ் அறக்கட்டளையின் இயக்குநரனான சிவேந்திர சிங் துங்கர்பூரு கூறுகையில், "அக்கினேனி நாகேஸ்வர ராவ் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது மிகவும் பெருமையானது. PVR INOX உடனான எங்கள் கூட்டாண்மை மூலம், திரைப்படத்திற்கான ANR இன் இணையற்ற பங்களிப்புகள் பாதுகாக்கப்பட்டு வருங்கால சந்ததியினருக்கு காட்சிப்படுத்தப்படுவதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.
ஃபிலிம் ஹெரிடேஜ் அறக்கட்டளை கிளாசிக் திரைப்படங்களை மீட்டெடுப்பதற்கும், புத்துயிர் பெறுவதற்கும் உறுதி பூண்டுள்ளது. மேலும் இந்த விழா இந்திய சினிமாவின் ஜாம்பவான்களை கவுரவிக்கும் எங்கள் நோக்கத்தில் ஒரு படி முன்னேற்றமாகும்.