ஹைதராபாத்: ஜூனியர் பெண் நடன இயக்குநர் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரில், ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கில் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் ராயதுர்கம் பகுதியில் ஜூனியர் பெண் நடன இயக்குநர் ஒருவர், நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார்.
பின்னர், அந்த வழக்கு நார்சங்கி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. இந்நிலையில், நடன இயக்குநர் ஜானியை போலீசார் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனைத் தொடர்ந்து ஜானி மாஸ்டர் தலைமறைவானது போலீசாருக்கு தெரிய வந்தது. பின்னர் தலைமறைவாக இருந்த ஜானி மாஸ்டரைக் கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும், காஷ்மீர் லடாக்கிற்கும் அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: குக் வித் கோமாளியில் மணிமேகலை விலகலுக்கு என்ன காரணம்? வீடியோ வெளியிட்ட குரேஷி! - kureshi about manimegalai issue
இதனையடுத்து, இன்று (செப் 19) நடன இயக்குநர் ஜானி கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்திற்காக ஜானி தேசிய விருது வென்றார். அதேபோல், ஜானி மாஸ்டர் மிகவும் பிரபலமான புட்ட பொம்மா, காவாலா ஆகிய பாடல்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.