சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படத்திற்கு கிடைத்த எதிர்மறை விமர்சனங்களால் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் நடிகர் விஜய் ரசிகர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 14ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘கங்குவா’.
சூர்யாவின் திரைவாழ்வில் அதிக பொருட்செலவில் வெளியான ’கங்குவா’ திரைப்படம் அதிகமாக எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. கங்குவா படத்தில் இரைச்சல் அதிகமாக உள்ளது, கதை சரியில்லை என பல குறைகள் உள்ளதாக நெட்டிசன்கள் படத்தை விமர்சித்து தள்ளினர். மேலும் சினிமா விமர்சகர்கள் பலர் கங்குவா படத்தை கடுமையாக விமர்சித்தனர். இதன் எதிரொலியாக கங்குவா படத்தில் 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
மேலும் படத்திற்கு கிடைத்த எதிர்மறை விமர்சனங்களுக்கு ஞானவேல் ராஜா மனைவி நேஹா, நடிகர் சூர்யா மனைவி ஜோதிகா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் படத்திற்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதுமட்டுமின்றி சமீப காலங்களில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் கடுமையான விமர்சனங்களால் வசூல் பாதிக்கப்படுவதாகவும், விமர்சகர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் எனவும் திரையரங்க சங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
முன்னதாக ’பிகில்’ படத்துடன் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் ’கைதி’ திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. அப்போது ’கைதி’ திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. அப்போது ரசிகர் ஒருவர் ஆன்லைனில் பிகில் டிக்கெட் வாங்குவதற்கு பதில் கைதி டிக்கெட் வாங்கியதால் வருத்தப்படுவதாக கூறியுள்ளார். அதற்கு எஸ்.ஆர்.பிரபு 'தம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு, அறிவு இல்ல போ’ என கூறியுள்ளார்.