சென்னை:சன் லைஃப் கிரியேஷன்ஸ் வழங்கும் கன்னி படத்தின் செய்தியாளர் சந்திப்பு, இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் பேரரசு, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய பேரரசு, “கூட இருப்பவர்கள் தான் குழி பறிப்பார்கள். கடந்த இரண்டு வருடங்களில் சிறிய பட்ஜெட் படங்களை வெற்றி பெற வைப்பது ஊடகங்கள் தான். கதாசிரியருக்கு முதல் தகுதி. அடுத்தவர் கதையை திருடக் கூடாது. அவர் கதை திருடன். வெளியே சொன்னால் அவன் பொய் சொல்லி விடுவானோ என்ற பயத்தில் வெளியே சொல்லாமல் இருக்கின்றனர். டிஸ்கஷன் என்பதோ போய் விட்டது. சித்த மருத்துவம் என்ற நல்ல விஷயங்களை மறந்துவிட்டோம்.
ஆங்கில மருந்துகள் அதிகரிக்க அதிகரிக்க சர்க்கரை அதிகரிக்கிறது. ஒரு குடும்பத்தில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது வீடுகளில் இயற்கை உணவுகள் சமைப்பது அதிகரித்துள்ளது. கரோனாவிற்கு பிறகு உயிர் பயத்தால் நாட்டு மருந்துகளின் அவசியம் தெரிகிறது. எனக்கு சிறுநீரக கல் இருந்தது. நாட்டு மருந்தால் தான் அதனை கரைத்தேன். நம் எல்லோருக்கும் முதல் தெய்வம் குலதெய்வம் தான் இருக்க வேண்டும்.
நாங்கள் சிலரைப் பற்றி பேசுவது சினிமா மீது உள்ள அக்கறை, தனிநபர் மீதுள்ள கோபம் அல்ல. எங்களை சாதிக் கட்சி தலைவர் ஆக்கி விடாதீர்கள்” என்று கூறினார். அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், “கரோனா நோய் வந்த பிறகு சித்த மருத்துவத்தின் மகத்துவம் தெரிந்தது. பக்கவிளைவு இல்லாதது. உடலுக்கு வலு சேர்ப்பது சித்த மருத்துவம். இன்னும் பத்து ஆண்டுகளில் சித்த மருத்துவம் பெரிய அளவில் உருவாகப் போகிறது.