சென்னை: இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுபவர் பிரபு தேவா. தனது நடனத் திறமையால் ஏராளமான ரசிகர்களை தன்வசம் வைத்துள்ளார். நடிகர், நடன ஆசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமையுடன் இயங்கி வரும் இவரது நடிப்பில் தற்போது புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது.
இப்படத்தை முத்தமிழ் படைப்பகம் சார்பில் தயாரிப்பாளர் எ.ஜெ.பிரபாகரன் தயாரிக்கிறார். இயக்குநர் ஜெ.எம்.ராஜா இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு 'சிங்காநல்லூர் சிக்னல்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை, கலகலப்பான நகைச்சுவை கலந்து, அனைவரும் ரசிக்கும்படியான ஃபேமிலி என்டர்டெயினராக இப்படம் உருவாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். இந்த நிலையில், 'சிங்காநல்லூர் சிக்னல்' படத்தின் பூஜை படக்குழுவினரோடு இன்று (ஜூலை 03) நடைபெற்றது.
மேலும், பிரபுதேவா நடிப்பில் வெளியான 'மனதை திருடிவிட்டாய்' படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். தற்போது, 23 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா - யுவன் சங்கர் ராஜா கூட்டணி இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்று.
இதுமட்டுமல்லாது, இப்படத்தில் பவ்யா ட்ரிக்கா நாயகியாக நடிக்கிறார். லேபில் வெப் தொடரில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ஹரி சங்கர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்ரீமன், ஷைன் டாம் சாக்கோ, ஹரீஷ் பேரடி, ஹரிசங்கர், நிகில் தாமஸ், அயாஸ் கான், பிரதோஷ் ஜெனிபர், சித்ரா லட்சுமணன், ஸ்ரீ ரஞ்சினி, அஜய் கோஷ், சுரேஷ் சக்கரவர்த்தி, பி.எல்.தேனப்பன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.
இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் எ.ஜெ.பிரபாகரன், "ஒரு முழு நீளத் திரைப்படம் எடுக்கும் நோக்கத்தில் இப்படத்தை உற்சாகமாக துவங்கியுள்ளோம். இப்படத்தில் நடனப்புயல் பிரபுதேவாவுடன் இணைந்து பணியாற்றவுள்ளோம். பவ்யா நாயகியாக நடிக்கிறார். ஸ்ரீமன் முக்கியமான ரோலில் நடிக்கிறார். படம் எல்லோரும் ரசிக்கும்படி இருக்கும்" என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து பிரபுதேவா பேசியபோது, "இங்கு நீண்ட காலம் கழித்து உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி. இங்குள்ள பலரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். ஸ்ரீமன் பல வருடமாக என் ஃபிரண்ட், அவருடன் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி" என்று தெரிவித்தார்.
மேலும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்று (ஜூலை 3) சென்னையில் துவங்கியுள்ளது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை கோவையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:"பால்வெளி பாதை மேலே மேகமாய் உலவலாமே.." 'இந்தியன் 2' காலண்டர் பாடல் வெளியானது!