சென்னை: நடிகரும், இந்தியாவே கொண்டாடும் நடனக் கலைஞருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை(பிப்.22) பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரபுதேவாவின் ரசிகர்கள், பல்வேறு திரை பிரபலங்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் பிரபுதேவா. நடன இயக்கம், நடிப்பு, இயக்கம் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் பிரபுதேவா, இதுவரை தனது நடன நிகழ்ச்சியை ரசிகர்கள் பார்க்க நேரடியாக எங்கும் நடத்தியதில்லை. முதல் முறையாக சென்னையில் கடந்த வாரம் நேரடி நடன நிகழ்ச்சியை நடத்தினார்.
அருண் ஈவென்ட்ஸ் நிறுவனம் ஒருங்கிணைத்த பிரபுதேவாவின் இந்த லைவ் நடன நிகழ்ச்சியில் 100 நடன கலைஞர்களுக்கு மேல் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் நடன இயக்குநர் சாண்டி, நடிகர்கள் பரத், சாந்தனு, நாகேந்திர பிரசாத். நடிகைகள் லட்சுமி ராய், ரித்திகா சிங், சானியா ஐயப்பன், ஜனனி, ப்ரீத்தி அஸ்ராணி உள்ளிட்டோர் பிரபுதேவாவுடன் இணைந்து நடனமாடி, ரசிகர்களை மகிழ்வித்தனர். மேலும் இந்நிகழ்வில், நடிகர் பாக்யராஜ், வடிவேலு, எச்.ஜே.சூர்யா, தனுஷ் நடிகைகள் ரம்பா, மீனா, ரோஜா, சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வின் மூலம் ரசிகர்களுக்கு ஆச்சரியம் மட்டுமல்லாமல் ஆனந்த அதிர்ச்சியை கொடுத்துள்ளார் பிரபுதேவா. வீடியோ ஒன்றில் ’பேட்ட ராப்’ பாடலுக்கு பிரபு தேவாவிற்கு இணையாக நடனமாடி இளைஞர் ஒருவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அவருடன் நடன இயக்குநர் சாண்டியும் ஆடினார். அதன் பிறகு பிரபு தேவாவுடன் போட்டி போட்டு ஆடிய இளைஞன் தான் அவரது மகன் என அனைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளார் பிரபுதேவா. இதனை பிரபுதேவா தனது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.