சென்னை: இன்று 385வது சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. தென்னிந்திய சினிமாவில் சென்னை மாநகருக்கு முக்கிய பங்கு உள்ளது. சினிமா உருவான காலத்தில் அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களும் சென்னையில் தான் எடுக்கப்பட்டு வந்தது. ஆரம்ப காலத்தில் சென்னையில் மட்டும் 10க்கும் மேற்பட்ட சினிமா ஸ்டூடியோக்கள் இயங்கி வந்தன. ஜெமினி, விஜயா, வாஹினி, ஏவிஎம், பிரசாத், சத்யா ஸ்டூடியோஸ் என ஏராளமான ஸ்டூடியோக்கள் இருந்தன.
ஏவிஎம் மக்கள் செய்து தொடர்பாளர் பெருந்துளசி பழனிவேல் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) தற்போது பெரும் புகழ் பெற்ற தென்னிந்திய நடிகர்கள் எவரும் சென்னையில் உள்ள ஸ்டூடியோக்களில் ஒரு நாளாவது படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருப்பர். தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி ரஜினி, கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு என முன்னணி நடிகர்களை நாம் ஆதர்ச நாயகர்களாக பார்த்து ரசித்த சினிமாவின் தொடக்கமே இந்த ஸ்டூடியோக்கள்தான் எனலாம்.
கோடம்பாக்கம், வடபழனி ஆகிய இடங்களில் ஸ்டூடியோக்கள், அதனைச் சார்ந்த லேப்கள், ரெக்கார்டிங் திரையரங்குகள் என களைகட்டி இருந்தது. ஒரு காலத்தில் நடிகை பானுமதியின் பரணி ஸ்டூடியோ, கற்பகம் ஸ்டூடியோ, அருணாச்சலம் ஸ்டுடியோ, பிரசாத் என கொடிகட்டிப் பறந்தது சினிமா உலகம். ஏவிஎம் ஸ்டூடியோவின் உலக உருண்டை அப்போது மிகவும் பேசப்பட்டது. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என அனைத்து மொழி படங்களின் படப்பிடிப்பும் சென்னையில் தான் எடுக்கப்பட்டு வந்தது.
இப்படி சென்னையின் முக்கிய அடையாளமாக விளங்கிய ஸ்டூடியோக்கள் பற்றி தனது நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் ஏவிஎம் ஸ்டூடியோவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் செய்தி தொடர்பாளராக (PRO) பணியாற்றிய பெருந்துளசி பழனிவேல். அவர் பேசுகையில், "கோவையில் மாடர்ன் தியேட்டர்ஸ் தான் முதன்முதலில் ஸ்டுடியோ தொடங்கினார். எம்ஜிஆர் தொடங்கி பல்வேறு நடிகர்களை வைத்து படம் எடுத்த மிகப் பெரிய நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ்.
அதேபோல் விஜய வாஹினி ஸ்டூடியோவும் மிகப் பெரிய படங்களை தயாரித்தது. ஜெமினி ஸ்டூடியோவும் சந்திரலேகா போன்ற மிகப் பிரமாண்டமான படங்களை தயாரித்தது. எம்ஜிஆரின் 100வது படமான ஒளிவிளக்கு, ஔவையார் படங்களை எடுத்தனர்" எனக் கூறினார்.
ஏவிஎம் ஸ்டுடியோஸ் குறித்து பேசுகையில், “காரைக்குடியில் முதன் முதலில் ஓலைக்கொட்டகையில் ஸ்டூடியோ அமைத்தவர் ஏவிஎம் நிறுவனர் மெய்யப்ப செட்டியார். தென்னிந்திய சினிமாவின் கலங்கரை விளக்கம் ஏவிஎம் நிறுவனம் என்று கூறலாம். தமிழில் சிவாஜி கணேசன் மற்றும் களத்தூர் கண்ணம்மா படத்தில் கமல்ஹாசன் ஆகியோரை அறிமுகப்படுத்திய ஏவிஎம் நிறுவனம் கன்னடத்தில் ராஜ்குமார், நாகேஸ்வர ராவ் ஆகியோரை அறிமுகப்படுத்தியது. இந்தியில் ஏவிஎம் ஸ்டூடியோவுக்கு பலத்த வரவேற்பு இருந்தது. அனைத்து மொழி நடிகர்களின் படங்களின் படப்பிடிப்பும் சென்னை ஏவிஎம்மில் நடைபெற்றதால் தென்னிந்திய நடிகர் சங்கம் என பெயர் வரக் காரணமாக அமைந்தது” என்றார்.
அப்போதைய நடிகர்கள் குறித்து பேசுகையில், “அப்போது இருந்த நடிகர்களிடம் தொழில் பக்தி, ஈடுபாடு முதலாளியிடம் மரியாதை இருந்தது. எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் கதைக்கு பொருந்தினால் மட்டுமே நாயகனாக நடிக்க வைப்பார்கள்” என்றார். சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்புகள் குறித்து பேசுகையில், "சென்னையில் அப்போது இருந்த அனைத்து ஸ்டூடியோக்களிலும் படப்பிடிப்பு நடக்கும். சாரதா, விக்ரம், சத்யா ஸ்டுடியோக்களில் எப்போதும் படப்பிடிப்புகள் நடந்து கொண்டே இருக்கும். சத்யா ஸ்டூடியோவை எம்ஜிஆர் வாங்கி மிகச் சிறப்பாக நடத்தி வந்தார்” என்றார்
மேலும், சினிமாவின் வளர்ச்சி குறித்து பேசுகையில், “அப்போது எல்லாம் படப்பிடிப்பு என்பது ஸ்டுடியோக்களில் மட்டுமே நடைபெற்றது. பாரதிராஜா வரவுக்குப் பின் படப்பிடிப்பு கிராமங்களுக்கு மாறியது. ஸ்டுடியோக்குள் படம் எடுத்தால் யதார்த்தமாக இருக்காது என்ற நிலை மாறியது. ஸ்டுடியோக்களுக்கு வேலை இல்லாமல் போனது. அன்றைய காலகட்டதை தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று கூறலாம்.
தமிழில் நடித்தால் பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. சென்னையை சினிமாவும், அரசியலும் ஆக்கிரமித்து இருந்தது. ஏனென்றால் அன்றைய மக்களுக்கு சினிமா மட்டுமே பொழுதுபோக்காக இருந்து வந்தது. அதனால் நல்ல படங்களுக்கு, நல்ல தயாரிப்பாளர்கள் கிடைத்தனர். சென்னை என்ற ஒரு கலைக்கூடம் கமர்ஷியல் இடமாக மாறி வருவது மிகவும் வேதனை தருகிறது” என்று தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:'தங்கலான்' பட விவகாரத்தில் பா.ரஞ்சித் மீது பெண் வழக்கறிஞர் புகார்! - Pa Ranjith