சென்னை: 70ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஓவ்வொரு வருடமும் திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு தேசிய விருது வழங்குகிறது.
இந்நிலையில் 2022ஆம் ஆண்டில் தணிக்கை செய்யப்பட்ட படங்களுக்கு விருதுகள் அறிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில் தமிழில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2022இல் வெளியான திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இப்படத்தில் தாய் கிழவி, மேகம் கருக்காதா ஆகிய பாடல்கள் மிகவும் பிரபலமானது. இந்நிலையில் 'திருச்சிற்றம்பலம்' படத்திற்காக சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருது ஜானி மற்றும் சதீஷ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நடன இயக்குநர் சதிஷ் நமது ஈடிவி பாரத் சினிமா செய்தியாளர் ஆனந்திடம் தொலைப்பேசி வாயிலாக பேசியபோது, "நான் தற்போது அமெரிக்காவில் தனியாக உள்ளேன். தேசிய விருது கிடைத்த செய்தி கேட்டு எனது கண்ணில் கண்ணீர் வருகிறது. நான் வீட்டில் கூறிய போது, எனது மனைவி மற்றும் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். தேசிய விருது வென்றதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் தொலைபேசி மூலம் முதலில் வாழ்த்து தெரிவித்தார். எனக்கு இதனை எப்படி அனுபவிப்பது என தெரியவில்லை" என்றார்.