சென்னை:இந்திய நாடாளுமன்றத்தின் 18வது பொதுத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 290க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 303 இடங்களை பெற்று அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பாஜக இந்த முறை 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதனால் ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளின் கைகளை எதிர்நோக்கி உள்ளது. இதில் ஆந்திர மாநிலத்தின் தெலுங்கு தேசம் மற்றும் பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பின் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்க உள்ளார்.
மோடி பதவியேற்பு:மோடி தலைமையில் புதிய அமைச்சரவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவி ஏற்க உள்ளது. டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறும் இந்த விழாவில் ஏராளமான முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இதையடுத்து, இலங்கை, வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவுகள், செஷல்ஸ் மற்றும் மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் தங்கள் வருகையை உறுதி செய்துள்ளனர்.
ரஜினிகாந்த் புகழாரம்:குறிப்பாக இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்தும் பங்கேற்க உள்ளார். முன்னதாக விமான நிலையம் செல்லும் முன் போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன்பு நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில்"பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு செல்கிறேன். ஜவஹர்லால் நேருக்கு பின்பு மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்கிறார் இது அவருடைய சாதனை" என தெரிவித்தார்.