தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தனுஷுக்கும் கட்டுப்பாடு?.. களத்தில் இறங்கிய நடிகர் சங்கம்.. படப்பிடிப்பு நிறுத்ததிற்கு கடும் எதிர்ப்பு! - Nadigar Sangam - NADIGAR SANGAM

Nadigar Sangam: தனுஷ் விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது என நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் தனுஷ் மற்றும் கார்த்திக்
நடிகர்கள் தனுஷ் மற்றும் கார்த்திக் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Entertainment Team

Published : Jul 30, 2024, 8:54 AM IST

சென்னை:நடிகர்கள் விஷால் மற்றும் தனுஷ் ஆகியோருக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் புதிய படம் நடிக்க கட்டுப்பாடுகள் விதித்த நிலையில், சென்னை தி.நகரில் நடிகர் சங்கம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் ஆகியோர் நேரிலும், தலைவர் நாசர் மற்றும் செயலாளர் விஷால் ஆகியோர் காணொளி வாயிலாகலும் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் கார்த்தி, "திரைத்துறையில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் நல்ல உடன்பாட்டில் தொடர்ந்து பணியாற்றுகிறோம். இதற்கு முன் நடிகர் சார்ந்த பிரச்சனைகளாக இருந்தாலும், தயாரிப்பாளர் சார்ந்த பிரச்சனைகளாக இருந்தாலும் இரு குழுக்கள் அமைத்து தான் முடிவுகள் எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் ஒரு புகாரும், வேலை நிறுத்தமும் முடிவெடுத்துள்ளனர். அது தொடர்பாக தலைவரிடமும் செயலாளரிடமும் வீடியோ கான்பரன்ஸில் பேசி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தயாரிப்பாளர் சங்கம் திடீரென எடுத்த முடிவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. இது தொடர்பான அடுத்த தீர்மானங்களை அடுத்த செயற்குழுவில் நிச்சயமாக எடுப்போம். இதுவரை பேசிய விஷயங்கள் ஒவ்வொன்றுக்கும் பதில்கள் அளிக்கப்பட்டு வந்தது. பிரச்சினையையும் தீர்த்து வருகிறோம்.

ஆனால், இந்த பிரச்சினை குறித்து அவர்கள் அளித்த புகார் எதுவும் எங்களிடம் வரவில்லை. எழுத்துப் பூர்வமாக புகார் எதுவும் வராத நிலையில், திடீரென அவர்கள் அறிக்கையை வெளியிட்டது ஆச்சரியமாக இருக்கிறது. அதற்கான விளக்கத்தையும் நாங்கள் எங்கள் அறிக்கையில் கேட்டிருக்கிறோம். தொடர்ந்து இனிமேல் அவர்கள் பணியாற்ற முடியாது என்பது தவறான வார்த்தை பிரயோகம் என்று நினைக்கிறேன்.‌

படப்பிடிப்பை நிறுத்துவது என்பது, எத்தனையோ தொழிலாளர்கள் சார்ந்த விஷயம். அதை எப்படி அவர்களே முடிவு எடுக்க முடியும் என்பதும் சந்தேகத்திற்குரியது. யாரிடமும் கலந்தாலோசிக்காமல் வேலைநிறுத்தம் முடிவை எடுக்கக் கூடாது. பெப்சிக்கு தெரியுமா இந்த விஷயம்?" என கேள்வி எழுப்பினார்.

அதனைத் தொடர்ந்து நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன் பேசுகையில், "தயாரிப்பாளர் கொடுத்த புகாருக்கு நாங்கள் பதில் கொடுத்திருக்கிறோம். இனிமேல் எங்கள் நடிகர்கள் மீது எந்த புகார்கள் கொடுத்தாலும் பதில் அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்கு மேல் தான் நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

தனுஷ் குறித்தான புகார் என்பது இதுவரை எதுவும் எங்களிடம் இல்லை. தயாரிப்பாளர் சங்கம் எங்களிடம் கொடுப்பார்கள் அதேபோல் நடிகர்களுக்காக நாங்களும் அவர்களிடம் கொடுப்போம்.‌ திடீரென்று தனுஷ் மீது ஒரு நடவடிக்கை வந்திருக்கிறது. அதனால் நாங்கள் ஒரு அறிக்கையை தெளிவாக கொடுத்திருக்கிறோம்.‌ இப்போதும் நாங்கள் நட்புணர்வோடு தான் இருக்கிறோம்" என்று பேசினார்.

அதையடுத்து பேசிய நடிகர் சங்க துணை தலைவர் கருணாஸ், "எல்லா சங்கத்தையும் கலந்து ஆலோசனை செய்து முடிவெடுக்க வேண்டும் அதுதான் மரபு. கடந்த காலங்களில் அப்படித்தான் நடந்திருக்கிறது. இந்த முறை தன்னிச்சையாக தயாரிப்பாளர் சங்கம் அந்த முடிவை அறிவித்துள்ளனர். நடிகர் சங்கம் இதை வன்மையாகக் கண்டிக்கிறது. அதே மாதிரி நடிகர்களும் பல படங்களுக்கு தேதி கொடுத்து, திடீரென அவர்களின் தொழிலை முடக்குவது என்பது நியாயமற்ற செயல். இதற்கான முடிவை சங்கத்தின் சார்பில் எழுத்துப்பூர்வமாக கொடுத்திருக்கிறோம்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:நவ.1 முதல் அனைத்து விதமான படப்பிடிப்பு பணிகளும் நிறுத்தம் - தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details